Thursday, July 31, 2008

450. தீவிரவாதம் கருக்கிய மலர்கள்

"அம்மா, எனக்கு தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணி தாயேன்" என்றும், "அம்மா, ஏன் எனக்கு சாப்பிட ஒண்ணுமே தர மாட்டேன்கிற, பசிக்குது" என்றும், "அம்மா, என்னை அப்பாகிட்ட கூட்டிட்டுப் போயேன்" என்றும் நெருப்பில் இட்ட புழுவாக, யாஷ் என்கிற அந்த 9 வயது பாலகனின் வேதனை அலறல்,பார்ப்பவரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது :( தனது கணவனை சமீபத்திய அகமதாபாத் குண்டு வெடிப்பில் பறி கொடுத்த (கீதா என்கிற) அந்தத் தாய், தன் மகனின் நிலையைக் கண்டு வெடித்து அழுவதைப் பார்க்கையில், 'கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா' என்ற ஆதார சந்தேகம் வருகிறது :(

மேற்கூறிய காட்சி, அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவில்! அதே மருத்துவமனை வாசலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் காரணமாக 50% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் யாஷுக்கு, டாக்டரின் அனுமதியின்றி ஒரு சொட்டுத் தண்ணீரோ, உணவோ தர இயலாத நிலையில் கீதா பரிதவிப்பது காணச் சகிக்காததாக இருக்கிறது. டிரிப் வழியாக குளுகோஸுடன் பல மருந்துகள் யாஷுக்கு ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. யாஷின் அண்ணன் ரோஹன், அதே மருத்துவமனையில் 80% தீப்புண்களுடன் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறான்.

தீவிரவாதத் தாக்குதலின் கட்டுப்பாடற்ற, சிறிதளவும் மனிதநேயமற்ற குரூரத்தை, இந்த இரு குழந்தைகளின் அவல நிலையே காண்பவர், தெளிவாக உணர முடியும். அதே சிகிச்சைப் பிரிவில், உடல் முழுதும் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் சுனில் என்பவர், மிக்க மன உறுதியோடு, "என் வலியுடன் என்னால் போராட முடியும். ஆனால், எந்தத் தவறும் செய்யாத இக்குழந்தைகள் வேதனையில் துடிப்பதையும் அலறுவதையும் பார்க்கையில் என் இதயம் வெடித்து விடுவது போல இருக்கிறது!" என்று கூறுகிறார். மொத்த மருத்துவமனையும் அக்குழந்தைகளுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது.

அந்த சிவில் மருத்துவமனையின் வாசலில் அவரது இரு மகன்களுக்கு, தந்தையான வியாஸ் (அவர்களுக்காக வாங்கிய புது) சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தபோது தான், குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்தவர்களுடன் முதல் ஆம்புலன்ஸ் வண்டிகள் வரத் தொடங்கியிருந்தன. எமன் காத்துக் கொண்டிருந்தது தெரியாமல் அவர்களின் சைக்கிள் நேராக குண்டு வைக்கப்பட்டிருந்த காரை நோக்கி பயணித்தபோது, குண்டு வெடித்து, வியாஸ் சிதறடிக்கப்பட்டார். மற்றும் 11 பேர் (இதில் ஒரு டாக்டர் தம்பதியும் அடக்கம்!) பலியாயினர் :(

அடிபட்டவருக்கு உதவி செய்ய ஓடோ டி வந்த 20 வயது பவேஷ், மருத்துவமனை குண்டு வெடிப்பில் படு காயமடைந்து, அதே மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார். குண்டு வெடிப்பில் அடிபட்ட பல நபர்களை மருத்துவமனைக்கு கூட்டி வந்த வினோத் என்கிற ஆட்டோ ஓட்டுனர் மருத்துவமனை குண்டு வெடிப்பில் சிக்கி, இரு கால்களும் செயலிழந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறார் ! அந்த வேதனையிலும், "இனி கஷ்டத்தில் இருக்கும் யாருக்கும் என்னால் உதவ முடியாதே" என்று அரற்றுகிறார் :( What a senseless and mindless act of violence unleashed by these terrorists!

அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கியவர்கள் அங்கிருக்கும் 2 முக்கிய அரசு மருத்துவமனைகளுக்குத் தான் எடுத்து வரப்படுவார்கள் என்று சரியாக கணித்து, இந்த 2 மருத்துவமனைகளில் சரியான நேரத்தில் குண்டு வெடிக்குமாறு தீவிரவாதிகள் திட்டமிட்டுச் செய்துள்ளனர்.

ஈவு இரக்கமில்லாமல் அப்பாவிகளை வேட்டையாடும் இந்த தீவிரவாத அரக்கர்களை என்ன செய்தால் தகும் ?

எ.அ.பாலா

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

Thursday, July 24, 2008

449. புராதானச் சென்னையின் கட்டுப்பாடற்ற பேருந்துப் பயணங்கள்!

ஜே.எஸ்.ராகவன் என்பவர் எழுதி, சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான இந்த "மலரும் நினைவுகள்" கட்டுரையை (இயன்றவரை நகைச்சுவைக்கு பங்கம் ஏற்படாதவாறு!) தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.
********************
இரண்டாம் உலகப்போர் முடிவில், நிலக்கரிக்கு மாற்றாக பெட்ரோல் எரிபொருளாக பயன்படத் துவங்கிய காலத்தில், பூந்தமல்லிக்கும் பிராட்வேக்கும் இடையே, நெரிசல் இல்லாத சாலைகளில் பறந்த அந்த தனியார் பேருந்துகள் இன்னும் என் ஞாபகத்தில் உள்ளன. ஆங்கிலேயக் கொலையால் 'பூனமல்லே' என்று திரிந்த பூவிருந்தவல்லியைப் பற்றி பேசும்போது, அப்போது அங்கு அமோகமாக வளர்ந்த வெண்பனி நிற மல்லிப்பூவின் வாசம் (என்னையொத்த வயதானவர்களின்) நினைவில் வீசுவதை தவிர்க்க இயலாது!

அக்காலத்தில் பூந்தமல்லி டெர்மினஸில் பேருந்து புறப்படுவதை விசிலடித்து அறிவிக்க ஒரு நேரக் காப்பாளர் (Time Keeper) இருந்தார். ஆனால் ஓட்டுனரோ அவரது விசிலை கண்டு கொள்ளாமல், பேருந்தில் பயணிகள் ஓரளவு நிறைந்த பின்னர் தான் பேருந்தைத் துவக்குவது வழக்கம்! அப்பேருந்துகளின் நடத்துனர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தனர்! சிலர் உருண்டையாகவும், சிலர் 'தொள தொளா' சட்டை / கால்சராயுடனும், இன்னும் சிலர் அழகாக நறுக்கப்பட்ட பென்சில் மீசையுடனும் பார்க்க காமெடியாக இருப்பர் :) அவர்களில் என்னைக் கவர்ந்தவர், வெண்மையான முகத்தில் இங்க் அடித்தது போல தெரியும் ஹிட்லர் மீசையுடன் காணப்பட்ட பழனி என்பவர்.

பெரும்பாலான பயணிகளுடன் பழனிக்கு நல்ல பழக்கம் இருந்ததால், அவர்கள் பட்டணம் செல்வது குறித்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதை பழனி வழக்கமாகக் கொண்டிருந்தார். மவுண்ட் ரோடில் இருந்த ஹிக்கின்ஸ்பாதம் புத்தகக் கடைக்கு என்னுடன் பயணித்த எனது தந்தையாருக்கு, பழனியிடமிருந்து டிக்கெட் பெறுவதில் துளியும் தயக்கம் இருந்ததில்லை. காரணம்: நடத்துனர்களில் பழனி ஒருவர் தான் டிக்கெடைக் கிழிக்க விரலை எச்சில்படுத்துவதில்லை:)

செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு அருகில் இருந்த பட் ரோடு நிறுத்தம் வந்தவுடன், நான் எனது கண்களையும், காதுகளையும் கூராக்கிக் கொள்வேன்! அக்காலத்தில், அவ்விடம் ஒரு குட்டி லண்டன் போல இருந்தது. வட்டமான தொப்பி அணிந்த ஆங்கிலேயக் கனவான்களுடன், கால்கள் தெரியும் விதத்தில் வண்ண வண்ண ஸ்கர்ட் அணிந்த வெள்ளை நிற பெண்மணிகள், அந்த நிறுத்ததிதில் தான் பேருந்தில் ஏறுவர்!

அந்த வெள்ளைக்கார ஜோடிகள் கை கோர்த்தபடி இருப்பர். இந்த கை கோர்த்தல், பொது இடத்தில் செய்யத்தகாத காரியமாக கல்யாணமான இந்தியர்கள் நினைத்த காலம் அது ! சில கனவான்களிடம் பீர் வாசனை அடிக்கும். வெள்ளைக்கார நங்கைகளோ வாசனை திரவிய தொழிற்சாலை போல கமகமவென்று வருவார்கள் !

பட்டணத்திலிருந்து பூந்தமல்லியை நோக்கி ஒரு இரவுப் பயணத்தின்போது, பார்க்க குளிரில் நடுங்கும் எலி போல காணப்பட்ட முனிசிபல் நீதிமன்ற பத்திர வியாபாரி என்னருகில் அமர்ந்திருந்தார். பேருந்து ஓடத் துவங்கியவுடன், அவரது தலை பக்கத்தில் இருப்பவர் தோளில் சாய்ந்து விடுவது என்பது பொதுவாக நடக்கும் விஷயம் தான், குறட்டையும் உண்டு :)

அக்கால பேருந்துகளில், இருவர் அமரக்கூடிய இருக்கைக்கு நேர் எதிரே இன்னும் இருவர் அமரும் விதமாக, இருக்கை அமைப்பு இருந்தது. எங்கள் இருக்கைக்கு எதிரே, கோட் சூட் அணிந்த ஓர் ஆங்கிலக் கனவானும், நீண்ட கால்கள் கொண்ட சிற்பம் போல இருந்த அவரது மனைவியும் அமர்ந்திருந்தனர். சாலையில் ஒரு மூதாட்டி முக்தி அடைவதை தடுக்கும் பொருட்டு, பேருந்து ஓட்டுனர் ஓர் அவசர பிரேக் அடித்ததில், என்னருகில் தூங்கிக் கொண்டிருந்த பத்திர வியாபாரி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல, அவ்வெள்ளைக்கார பெண்மணியின் தாராள மடியில் தஞ்சம் அடைந்தார் :)

நிலைமையை உணர்ந்த வியாபாரி, 'சாரி மேடம், சாரி மேடம்' என்பதை, ஏதோ ஒரு பிராயசித்த மந்திரத்தை ஜெபிப்பது போல் பல தடவை உச்சரித்தார்! "முதலில் எழுந்திரு மேன், அப்புறம் மன்னிப்பு கேளு" என்று கூறியபடி, அந்த ஆங்கிலேயப் பெண்மணி தனது மடியிலிருந்த வியாபாரியின் தலையை, ஒரு வீங்கிய பெருச்சாளியை அப்புறப்படுத்துவது போல, தனது இடது கையால் விலக்கித் தள்ளினார் ! பிறகு அப்பெண்மணி தனது ஸ்கர்ட்டை சரி செய்து கொண்டபோது, பழனி சிரிப்பை அடக்கிக் கொண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தார் :)

ஒரு மழைக்கால இரவில் கடைசிப்பேருந்தில் நானும் என் தந்தையாரும் பட்டணத்திலிருந்து பூந்தமல்லியில் உள்ள எங்கள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். தந்தையார் தூங்கி விட்டிருந்தார். 'பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டை அடைவதற்குள் ஹிக்கின்பாதம்ஸ் கடையில் வாங்கிய புத்தகங்கள் அத்தனையும் மழையில் நனைந்து விடுமே, என்ன செய்வது?' என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, பேருந்து மெல்ல நின்றது. வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது! எனது தந்தையாரை எழுப்பிய பழனி, நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதைத் தெரிவித்தார்.

சாலையில் என் பாதம் பட்டவுடன் தான் கவனித்தேன், எங்கள் வீட்டு வாசலிலேயே நாங்கள் இறக்கி விடப்பட்ட விஷயத்தை !!!

எ.அ.பாலா

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

Monday, July 14, 2008

448. ரங்கராஜன் நம்பி - My 2 cents!

எனது முந்தைய பதிவில் அம்முவின் விமர்சனத்தின் தொடர்ச்சியாக, எனது சின்ன மகளிடம் (6 வயது), 'படம் பிடித்ததா?' என்று கேட்டேன். அவள், "படத்தில 2 கமல் தானே ... சயிண்டிஸ்ட் கமல், கோயில்ல சண்டை போடற கமல் .. வராங்க, மீதி கமல் எல்லாம் எங்கே போனாங்க?" என்று ஒரு சூப்பர் கேள்வி கேட்டாள் :) நான் மற்ற 8 வேடங்களில் கமல் வருவது பற்றி விவரித்தபோது, "மத்த கமல் எல்லாம் பார்க்க ஏம்பா கார்ட்டூன் மாதிரி இருக்காங்க?" என்று இன்னொரு கேள்வி கேட்கவே, நான் அப்பீட் :)

My 2 cents: இணையத்தில் பலவகையான விமர்சனங்களை வாசித்து விட்டதால், உலகத்தரமான படத்தை எல்லாம் எதிர்பார்த்துச் செல்லவில்லை என்ற டிஸ்கியோடு தொடங்குகிறேன்! தசா ஒரு நல்ல மசாலா படம் என்று நிச்சயம் கூறமுடியும். Real Good Entertainer ! "சிவாஜி" பெட்டரா, "தசா" பெட்டரா என்று (ரஜினி ரசிகனான) என்னிடம் கேட்டால், என் பதில் ... No comments;) இதே படம், ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட ஓர் ஆங்கிலப் படமாக இருந்திருந்தால், அதன் concept மற்றும் 10 வேடங்களுக்கு சிலாகிக்கப்பட்டிருக்கும், நமது அடிமை மெண்டாலிட்டி அப்படிப்பட்டது :(

பிரம்மாண்டத்தை பிரம்மாண்டத்துடன் ஒப்பிட வேண்டும்! அந்த வகையில் சங்கரின் பல குப்பைகளை (சிவாஜி, இந்தியன் தவிர!) விட, தசா பரவாயில்லை என்று தான் கூறுவேன். இப்படி ஒப்பிடுவதை விடுத்து, சுப்ரமணியபுரத்துடனும், பருத்தி வீரனுடனும் ஒப்பிடுவது சரியான அணுகுமுறை கிடையாது! கமலின் சிறந்த நடிப்பைப் பார்க்க பலப்பல உத்தமமான படங்கள் (ராஜபார்வை, மூன்றாம் பிறை, நாயகன், ஹேராம், தேவர் மகன், குணா, குருதிப்புனல், மகாநதி, தெனாலி, அன்பே சிவம் ...) நமக்காக காத்திருக்கின்றன. மேலும், இந்தப் படத்திற்கு இவ்வளவு பணத்தைக் கொட்டியிருக்க வேண்டுமா போன்ற கேள்விகளுக்குள் செல்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை!

கமலின் நடிப்பு, குறிப்பாக பல்ராம் மற்றும் வின்செண்ட் வேடங்களில் சூப்பர். வின்செண்ட் பாத்திரப் படைப்பில் ஒரு எழவு (நுண்)அரசியலும் இருப்பதாகத் தோன்றவில்லை! பத்து வேடங்களும் வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, மேக்கப் சற்று அத்து மீறியதில், ஒரு வித 'ஒட்ட வைத்த' செயற்கைத்தனம் இருந்தது உண்மை தான் என்றாலும், பாத்திரத்திற்கு ஏற்ற பேச்சு வழக்கை அனுசரிப்பதில் கமலுக்கு இணை யாரும் கிடையாது. ஒன்றுமே இல்லாத புஷ் வேடத்தில் கூட , புஷ்ஷின் சின்னச்சின்ன மேனரிஸங்களை வெளிக் கொணர்ந்ததில், கமலின் நுண்ணிய கவனமும், உழைப்பும் தெரிகிறது.

ஒப்பனையும், தொழில்நுட்பமும் வளராத காலகட்டத்தில், தனது நடிப்பால் மட்டுமே 9 வேடங்களிலும் வித்தியாசம் காட்டிய 'நவராத்திரி' சிவாஜி, ஞாபகத்திற்கு வந்தது என்னவோ உண்மை தான்! அது போலவே, கமல் தானே பத்து வேடங்களிலும் நடிக்காமல், சிலவற்றை தாரை வார்த்துக் கொடுத்திருந்தால், இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் வந்திருக்காது என்று நினைக்கிறேன்.

தசாவின் 12-ஆம் நூற்றாண்டுக் காட்சிகளின் பிரம்மாண்டம், ஆங்கிலப்படங்களுக்கு இணையானது. கமல் நாத்திகராக இருந்தாலும், தசாவின் பத்து வேடங்களில் ரங்கராஜன் நம்பி என்ற ஆத்திக வைணவர் வேடம் தான் அவருக்கு சிறப்பாகப் பொருந்துகிறது :) சாரு தனது விமர்சனத்தில், கோயிலில் இறைசேவை செய்யும் வைணவர் இப்படித்தான் புஜ பராக்கிரமத்துடன் இருந்திருப்பாரா என்று சந்தேகப்படுவது போல் படாமல் இருந்தால், அக்காட்சிகளை ரசிக்க முடியும்! பக்தி உணர்வு உள்ளவர்களுக்கு சிலிர்ப்பு தரும் காட்சிகள் அவை. கமல் "சாந்தாகாரம், புஜகசயனம் ..." என்று சொல்லும்போது எனக்கு மெய் சிலிர்த்தது!

வைணவத்தில், பரந்தாமனின் அடியாரைப் பணிவது, பரமனைப் பணிவதைக் காட்டிலும் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது! அந்த சிறிய விஷயத்தைக் கூட கவனத்தில் கொண்டு, ரங்கராஜ நம்பியை மூலவர் சிலையுடன் கட்டி கடலுக்கு இட்டுச் செல்லும்போது, பல்லாண்டு பாடும் வைணவர்கள், ஒருவர் தோள் மேல் ஒருவர் ஏறி, (மூலவரின் திருவடியைப் பற்றி வணங்காமல்!) ரங்கராஜன் நம்பியின் திருவடியைப் பற்றி வணங்குவதை காட்சியில் கொணர்ந்திருக்கும் செயல் வியப்பை வரவழைத்தது!

அதே சமயம், கேயாஸ் தியரி, பட்டர்ஃபிளை எஃபெக்ட் பற்றியெல்லாம சிந்திக்கக் கூட தமிழ் சினிமாவில் ஆள் இருக்கிறாரே என்று சாரு போலவெல்லாம என்னால் சிலாகிக்க முடியவில்லை;-)

தமிழ் கூறும் நல்லுலகில் உலவும் அறிவுஜீவிகள், கமர்ஷியலாக தோல்வி அடையும் படங்களை மட்டுமே "நல்ல" படங்கள் என்று ஒத்துக் கொள்வது, சிலாகித்துப் பேசுவதும் ஏன் என்று புரியவில்லை! கமர்ஷியலாக வெற்றி அடையும் திரைப்படங்களில் எந்த வகையிலும் நடிப்புக்கு scope-ஏ கிடையாது என்று மறுத்துப் பேசுவது சரியாகாது.

தசாவை தமிழ் சினிமாவின் மைல்கல் என்றெல்லாம் கூற மாட்டேன்! அதே நேரத்தில், தசா போன்ற திரைப்படங்களால் தமிழ் சினிமாவுக்கு பின்னடைவு / ஆபத்து என்று நண்பர் சுரேஷ் கண்ணனுக்கு இணையாக கெட்டிக்காரத்தனமாக வாதாட எனக்கு சரக்கு போதாது :)

எ.அ.பாலா

447. "தசா" குறித்து அம்மு & பாலா

நேற்று காலை (மனைவியின் அலுவலகத்திலிருந்து பெற்ற ஓசி டிக்கெட்டு வாயிலாக!) குடும்ப சகிதம் தசாவதாரம் காணும் பெரும்பேறு கிட்டியது.  தசா குறித்து ரெவ்யூ எழுதி ஜோதியில் (பரங்கிமலை அல்ல:))கலக்காவிட்டால், நாமெல்லாம் என்ன "மூத்த" பதிவர் என்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு. 
 
என் மகள் அம்மு, 'அப்பா, நான் விமர்சனம் எழுதினால் உங்க பிளாகிலே போடுவீங்களா?" என்று கேட்கவே, "ஆஹா, நீ ஒருத்தி தான் பாக்கி, எழுதிக் கொடு, போட்ருவோம்" என்றேன்.  அதே சமயம் (11 வயது) அம்மு எப்படி தமிழ் எழுதுகிறாள் என்று அறியும் ஆர்வமும் ஏற்பட்டது !!!  முதலில் அம்முவின் விமர்சனம், followed by mine.

அம்மு: தசாவதாரம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் மாஸ்டர் பீஸ் ஆகும். கமலின் 10 அவதாரங்களில் தான் படமே இருக்கிறது.  எனக்குப் பிடித்தது விஷ்ணுவின் தாசனாக அவதாரமெடுக்கும் ரங்கராஜ நம்பி.  எந்தத் தவறும் செய்யாத அவரை கோவிந்தராஜரின் சிலையோடு கட்டிப் போட்டு சமுத்திரத்தில் போடுகின்றனர்.  இந்த முதல் அவதாரத்திற்குப் பிறகு, போகப் போக நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது!

அசினுக்கு (கமலுக்கு 10 அவதாரங்கள் இருக்கும்போது!) படத்தில் 2 அழகான அவதாரங்களே உள்ளன.  இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் கதாநாயகன் கோவிந்த் என்றாலும், பல்ராம் நாயுடு பாத்திரம் தான் பெஸ்ட்.   கமல், ஜார்ஜ் புஷ்ஷாகவும், ஜப்பான்காரராகவும், ஒரு 95 வயது பாட்டியாகவும் கூட ஜமாய்த்திருக்கிறார்.  நாயுடுவும், கலீபுல்லாவும், பாட்டியும் சிரிப்பு மூட்டுகின்றனர்.

எனக்கு இப்படத்தின் பாடல்கள் பிடித்திருந்தன.  படத்தின் வில்லனான ஃபிளெட்சரும், ஜப்பான்கார கமலும் சண்டை போடும் காட்சி பார்ப்பவர் உள்ளத்தை கவரும் வண்ணம் அமைந்திருந்தது.  பல விறுவிறுப்பான திடீர் திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் ஆக வெற்றி பெறும் என்பது என் கருத்து.

அன்புடன்
அம்மு

பி.கு: எனது விமர்சனம் தனிப்பதிவாக, இன்று மாலை வெளிவரும்!

Friday, July 11, 2008

446. ஆணாதிக்க அமர்சிங்கும் அம்பானி அரசியலும்

அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து நடந்து வரும் மீடியா கலாட்டாவில், கீழே உள்ள செய்திக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படாதது எதிர்பார்த்தது தான் என்றாலும், இந்த திமிர் பிடித்த ஆணாதிக்க மனோபாவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

இரு தினங்களுக்கு முன், சமாஜ்வாதி கட்சியின் மூத்த, மூளை மழுங்கிய, வெட்கங்கெட்ட, காரியவாதி அரசியல்வியாதியான அமர்சிங் (அவரது கட்சியின் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு தகுந்தாற் போல!) பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி, சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, சில பெண்ணிய இயக்கங்கள், அவரை கண்டித்ததோடு, அமர்சிங் பொதுவில் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன!

நாட்டின் மூத்த பெண் அரசியல்வாதியான சோனியாவை இழிவுபடுத்தும் வகையில் அமர்சிங்கின் பேச்சு அமைந்துள்ளதாக, அந்த பெண்ணிய இயக்கங்கள் வெளியுட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இத்தனை நாள் நாகரீகமற்ற வகையில் குடுமிபிடி சண்டை போட்டு வந்த காங்கிரசுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே சமீபத்தில் மலர்ந்துள்ள திடீர் நல்லுறவைப் பற்றி செய்தியாளர்கள் அமர் சிங்கிடம் கேட்டபோது, அவர் கடுப்பாகி, "பிரகாஷ் கரத் சோனியாவை சந்திக்கச் சென்றால், அதை திருமண இரவு என்கிறீகள் !? அதே நாங்கள் சோனியாவை சந்திக்கச் சென்றால், பலாத்காரம் என்று கூறுகிறீர்களே?" என்று திருவாய் மலர்ந்துள்ளார் !

இதை லூசுத்தனமான பேச்சு என்று விட்டுத் தள்ள முடியாது. அமர்சிங்கின் ஆணாதிக்க மனோபாவமே அருவருப்பான முறையில் வெளி வந்துள்ளது !

இது இப்படி இருக்க, நண்பர் அதியமான் கீழே எழுதியிருப்பதை (அம்பானி அரசியல் பற்றி) வாசியுங்கள்!

1991 வரை இந்தியாவில் நிலவிய லைசென்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜியத்தில் (அதிகாரிகள், அரசியல்வதிகள், தொழிலதிபர்கள் மூவரின் கூட்டு. அதன் மூலம் அதிகார துஷ்பிரோயகம் மற்றும் ஊழல் வளர உதவிய சோசியலுச பாணி பொருளாதாரம்) மிக அதிகம் வளர்ந்த ஒரு நிறுவனம் ரிலயன்ஸ். பல காங்கிரஸ் தலைவர்களை விலைக்கு வாங்கி அதன் மூலம் பல லைசென்சுகளை, இறக்குமதி அனுமதிகளை (அப்போது டாலருக்கு கடும் தட்டுப்பாடு, அதனால் அரசின் கட்டுபாடு மிக அதிகம்) பெற்று, போட்டியாளர்களுக்கு அவை கிடைக்காமல் செய்து வளர்ந்தது. (இது அன்று அனைத்து முதலாளிகளும் செய்தனர்/செய்ய வேண்டிய நிர்பந்தம் ; இன்று இல்லை).

தன் வினை தன்னை சுடும். பிரனாப் முகர்ஜியை பல ஆண்டுகளாக 'வளைத்து' போட்டிருந்தது ரிலையன்ஸ். பிறகு 90களுக்கு பின், முலயம் சிங்-இன் சமாஜ்வாடி கட்சியில் இணைந்த (இளைய) அனில் அம்பானி, எம்.பி ஆகுவும் ஆனார். 2004 பொது தேர்தலில் முலயாம் சிங் யாதவ் பெரும் வெற்றி பெறுவார், பிரதமர் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது என்று தப்பு கணாக்கு போட்டார் அனில் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு அனில் அரசியலில் நேரடியாக இறங்கியது பிடிக்கவில்லை. மேலும் தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் கருத்து வேறுபாடுகள். கருப்பு பணம் பல ஆயிரம் கோடிகள் இருவரிடமும். ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் பெரும் அளவில், பினாமி கம்பெனி பெயர்களில், முகேஷிடம் உள்ளது.

2006இல் சகோதரர்கள் சண்டையிட்டு பிரிந்தனர். அனில், ரிலயன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலயன்ஸ் காப்பிடல் மற்றும் ஒரு எனர்ஜி / கட்டுமான நிறுவனத்தையும் வைத்துகொண்டார். முகேஸின் கட்டுப்பாட்டில் ரிலயன்ஸ்நிறுவனம், இருவருக்குள்ளும் இன்னும் கடும் விரோதம் ; திரை மறைவு நாடகங்கள்..

சமாஜ்வாடி கட்சி இன்று அனில் அம்பானியின் பக்கம் பலமான ஆதரவாக உள்ளது. (பல நூறு கோடிகள் கொடுத்திருப்பார் !!). காங்கிரஸ் அமைச்சரவையில் உள்ள பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா முகேஸின் ஆள். அதனால் தான் 'ரிலயன்ஸ் பெட்ரோலிய நிறுவனம் ஏற்றுமதி செய்து ஈட்டிய 35% லாபம்மிக மிக அதிகம். அதற்கு உச்ச கட்ட வரி (windfall tax) விதிக்க வேண்டும்' என்று சமாஜ்வாடி கட்சி சில காலமாக கூச்சல் போடுகிறது.

இடது சாரிகள் ஆதரவு வாபஸ் ஆனவுடன், காங்கிரஸ் அரசுக்கு இன்று சமாஜ்வாடி கட்சியின் முழு ஆதரவு தேவையாகிவிட்டது. இனி அனில் அம்பானியின் கை ஓங்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவை பதவி நீக்கம் செய்ய அவர்கள் பிரதமரை நிர்பந்திப்பார்கள். முலயாம் சிங்கின் வலது கரமான அமர்சிங் ஒரு அதிகார தரகர். பிம்ப் வேலை கூட செய்வார் என்று கேள்வி. அபாயகரமான ஒரு அரசியல்வாதி.

இனி தான் இருக்கிறது நாடகம்!

தன் வினை தன்னைச் சுடும். ரிலயன்ஸ் எந்த வகையில் அரசியல்வாதிகளை வாங்கி வளர்ந்ததோ அதே வழியில் விழ வாய்ப்பு ஏற்படும் சூழல். ஆனால் அது நாட்டிற்க்கு நல்லதல்ல. ஜாம்நகரில் அமைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் சுத்தீகரிப்பு ஆலை உலகின் மிகச் சிறந்த ஆலைகளிள் ஒன்று. மிக குறைந்த நாட்களில், குறைந்த செலவில் கட்டப்பட்டது. மிக மிக நவீனமானது. அதனால் தான் லாபம் அதிகம்.

அது நம் தேசிய சொத்து! இதைப் புரிந்து கொள்வது கடினம்...

மேலும் பார்க்க :

http://indianeconomy.org/2008/07/08/guest-post-mukesh-ambani-under-fire/

Monday, July 07, 2008

FCI வீணாக்கிய 10 லட்சம் டன் உணவு தானியம்!

கடந்த 10 ஆண்டுகளில் நமது FCI (Food Corporation of India) கோடவுன்களில், (ஒரு கோடி ஏழை மக்களின் பசிப்பிணியை ஓராண்டு காலம் போக்க வல்ல) பல நூறு கோடிகள் மதிப்புள்ள 10 லட்சம் டன் உணவு தானியங்கள் உபயோகத்திற்கு லாயக்கிலாமல் போயிருக்கின்றன என்ற திடுக்கிடும் செய்தி, இந்தியக்குடிமகன் ஒருவர் 'தகவல் அறியும் உரிமை'யின் (RTI) பேரில் செய்த விண்ணப்பம் மூலம் தெரிய வந்துள்ளது !!!

இத்தனைக்கும், FCI நிறுவனம் தானிய சேமிப்பு பராமரிப்புக்காக ரூ.242 கோடி செலவு செய்த பின்னரும் இது நிகழ்ந்துள்ளது. அடுத்து, கெட்டுப் போன தானியங்களை கோடவுன்களிலிருந்து வெளியேற்ற இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை!

பல நூறு கோடி பெறுமானமுள்ள தானியங்கள் வீணாக்கப்பட்டிருப்பதை (தானியங்கள் வாங்குவதற்கும், சேமிப்பதற்கும், மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவதற்கும் பொறுப்பேற்று இருக்கும்) FCI நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. UNO (United Nations Organization) அறிக்கை ஒன்று, இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 63 சதவிகிதத்தினர் இரவு உணவு கிடைக்காமல் தூங்கச் செல்கின்றனர் என்ற அவலத்தை பறைசாற்றுவதை, இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது :(

இது ஒரு தேசிய அவமானமில்லையா ?????

இது போல பலப்பல பிரச்சினைகள் இருக்க, நமது பிரதமர் (அமெரிக்காவின் அடி வருடி) அணு ஆயுத ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்ற துடியாய் துடிப்பது வேதனை !

எ.அ.பாலா

நன்றி: Financial Express

Monday, June 30, 2008

444. அணுசக்தி ஒப்பந்தம், இடதுசாரிகள், பிரதமர், ஒபாமா ...

பத்து நாட்களுக்கு முன் நமது பிரதமர் மன்மோகன், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் தான் ராஜினாமா செய்து விடப் போவதாக (சோனியாவுடன் ஒரு நாடகம் நடத்தியதாக) செய்தி அடிபட்டது.  நியாயமாக, விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறி, ஏழை எளிய மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி இருக்கும் பிரதமரும், நிதி அமைச்சரும் ஏற்கனவே பதவி விலகி இருக்க வேண்டியவர்கள்.  அந்தக் காரணம் பொருத்தமானதாகவும் இருந்திருக்கும் !  நாளுக்கு நாள் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கும் Inflation Index பற்றி துளியும் கவலையின்றி,  கவைக்குதவாத அணுஆயுத ஒப்பந்தம் ஒன்றைப் பற்றியே சதா சர்வ காலமும் சிந்தித்துக்  கொண்டிருக்கும் நமது பிரதமரைப் பார்த்தால், ஒரே சமயத்தில் வருத்தமாகவும் / காமெடியாகவும் உள்ளது !!!

ஆகஸ்ட் 2006 திட்டக் கமிஷன் அறிக்கை ஒன்று, 2031-32 வரை இந்தியாவின் ஆண்டொன்றுக்கான 8 சதவிகித GDP தொடர் வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதும் 11 வகை எரிபொருள் கலப்புகள் (Fuel Mix) தரவல்ல சாதக/பாதகங்கள் குறித்துப் பேசும்போது, இன்றிலிருந்து 2031-32 வரை இந்தியாவின் அணுசக்தித் திறன் 20 மடங்காக உயர்ந்தாலும் நாட்டின் மொத்தத் தேவையில் அணுசக்தியின் பங்கு 4-6.4% மட்டுமே என்று தெளிவாக குறிப்பிடுகிறது. அதாவது, அணுசக்தி எக்காலத்திலும் நம் நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு தீர்வாகாது என்பது நிதர்சனமான உண்மை.

123 ஒப்பந்தம் தொடர்பான எனது பழைய பதிவு இங்கே, வாசித்து விட்டுத் தொடரவும்.
http://balaji_ammu.blogspot.com/2007/12/star4.html

இதில் நமது டிவி மீடியா அடிக்கும் கூத்தைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது!  இந்த ஒப்பந்தம் குறித்த சாதக/பாதகங்கள் சரியாக எடுத்துக் கூறுவதில்லை.  மீடியாவின் அமெரிக்க ஜால்ரா காதைக் கிழிக்கிறது. இவ்விஷயத்தில் இடது சாரிகள் எடுத்துள்ள நிலைப்பாடு சரியானது என்பது தான் என் கருத்து. மேலும், இதுவரை நடந்துள்ள காங்கிரஸ்-இடதுசாரி ஆலோசனைக் கூட்டங்களில், காங்கிரஸ் இந்த ஒப்பந்தம் குறித்த முழு விவரங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருந்திருப்பது, மிகுந்த சந்தேகங்களை எழுப்புகிறது. 

இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்காக, இடதுசாரியை கழட்டி விடத் துணிந்துள்ள ஆளும் கட்சி, சமாஜ்வாடி கட்சியின் காலில் விழத் தயாராக இருப்பது, உச்சபட்ச காமெடி :)  சாகக் கிடக்கும் அமெரிக்க அணுஆயுதத் தொழில் புத்துணர்ச்சி பெற்று (அதாவது, இந்தியா அங்கிருந்து தொழில் நுட்பத்தையும், யுரேனியத்தையும் இறக்குமதி செய்வதின் வாயிலாக!) மீண்டும் வளர்வதற்கு இந்தியா எதற்கு உதவ வேண்டும் என்பது ஒரு முக்கியக் கேள்வி! 

அடுத்து, தலைப்பில் "ஒபாமா"வும் வருவதால், அவர் மேட்டர் பற்றியும் எழுதணும் !  அதை
தனிப்பதிவாக இடுகிறேன், ஓக்கேவா ?

எ.அ.பாலா

Tuesday, June 24, 2008

443. இது தான்டா இந்தியத்தாத்தா !

இது நடந்தது ஜூன் 2002-இல்!

அமெரிக்க அதிபர் புஷ் ISI நிறுவனத்தில் பணி புரிந்த ஒருவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதை வழங்கி கௌரவித்தார் என்று கேள்விப்பட்டால், நாம் கொதித்துப் போக வேண்டியதில்லை ! நான் இங்கு குறிப்பிடும் ISI, பாகிஸ்தானின் Inter Services Intelligence என்கிற உளவுத்துறை நிறுவனம் அல்ல, நம் நாட்டின் பாரம்பரியமிக்க, கொல்கத்தாவிலுள்ள Indian Statistical Institute என்கிற அரசு நிறுவனம் :)

கௌரவிக்கப்பட்டவர் கலியம்புடி ராவ் என்கிற இந்திய புள்ளிவிவரயியல் (Statistics) மேதை! அவரது பெயரால் வழங்கப்படும் பல கோட்பாடுகளை (Rao Distance, Rao's Score Test, Cramer-Rao Inequality, Rao-Blackwellization, and Fisher-Rao Theorem) கண்டுபிடித்து, புள்ளிவிவரயியல் துறைக்கே பெருமை சேர்த்த வித்தகர் இவர்!

புஷ் வழங்கிய, ஜனாதிபதியின் அறிவியலுக்கான தேசியப் பதக்கத்தை இவருக்கு முன்னால் வாங்கியுள்ள, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நால்வர் - இயற்பியலுக்கு நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர், மரபியல் மேதை ஹர்கோபிந்த் குரானா, பெல் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் குமார் படேல் மற்றும் அருண் நேத்ரவல்லி ஆகியோர். மேற்கூறிய நால்வரும் தங்களது இளவயதிலேயே அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர்கள். ஆனால், கலியம்புடி ராவ் ISI இயக்குனர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தனது 60-வது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார், அவரது மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்த காரணத்தால். பொதுவாக, இந்த வயதில் இந்திய தாத்தா/பாட்டிகள் அமெரிக்காவில் வளரும் தங்களது பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு வேண்டி அங்கு செல்வது வழக்கம் :)

ஆனால், நமது சூப்பர் தாத்தாவோ, தனது 62-வது வயதில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து, 70வது வயதில், பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் புள்ளி விவரயியல் துறைத்தலைவராக உயர்ந்து, 75வது வயதில் அமெரிக்க குடிமகனா(ரா)கி, தனது 82வது வயதில், அமெரிக்கா ஜனாதிபதியின் அறிவியல் பதக்கத்தை வென்று பெருமை பெற்றவர்.

ராவ், "பணி ஓய்வு பெற்றபின் இந்தியாவில் நம்மை யாரும் மதிப்பதில்லை. உடன் பணி புரிபவர் கூட உங்கள் பதவிக்கு மரியாதை தருகிறார்களே அன்றி உங்கள் உழைப்பையும், மேதமையையும் மதிப்பதில்லை" என்று கூறுவதை வைத்து அவரது இந்திய அனுபவம் கசப்பானது என்று சொல்லி விட இயலாது. ஏனெனில், இவர் இந்திய அரசின் பத்மவிபூஷன் விருதை பெற்றவரும் கூட!

அவர் பணி புரியும் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகக் குறிப்பொன்று "நவீன புள்ளிவிவரயியலின் ஒரு முக்கிய முன்னோடியாகவும்,உலகின் தலை சிறந்த 5 புள்ளிவிவரயியலாளர்களில் ஒருவராகவும் ராவ் உலக அரங்கில் அறியப்பட்டுள்ளார்" என்று புகழாரம் சூட்டுகிறது. அவரது ஆராய்ச்சி, பொருளாதாரம், வானிலை, மருத்துவம், ஏரோனாடிக்ஸ் என்று பல துறைகளின் மேம்பாட்டுக்கு உதவியிருக்கிறது.

ராவ் இவ்விருதை புள்ளிவிவரயியலில் இந்தியாவின் சிறப்பு மிக்க பாரம்பரியத்திற்கு கிடைத்த மரியாதையாகவே பார்க்கிறார். ராவ் குறிப்பிடும் பாரம்பரியத்தின் அடித்தளத்தை அமைத்தவர், P C மஹாலனோபிஸ், இவர் தான் ISI நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆவார். உலகின் புள்ளிவிவரயியலாளர்களில் பெரும்பான்மையினர் இந்தியர்கள் என்பது கூடுதல் விவரம்!

எ.அ.பாலா

Monday, June 23, 2008

பொன்மொழிகள் 12

நீ இவ்வுலகில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என்று இருவகைப்பட்ட மனிதர்கள் கூறுவர்:
அவர்களில் ஒரு வகையினர் தாங்கள் முயற்சி எடுக்க அஞ்சுபவர்கள், மற்றொரு வகையினர் உனது
வெற்றியை நினைத்து அஞ்சுபவர்கள்.

ரே கோஃபோர்த்

ஒருவன் இவ்வுலகிலிருந்து எவ்வளவு எடுத்துக் கொண்டானோ, அதற்கு ஈடானதையாவது இவ்வுலகிற்கு திருப்பித் தர வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது!

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

நோக்கு(Attitude) என்ற சிறிய விஷயம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

பெறுவதை வைத்து நாம் வாழ்கிறோம். கொடுப்பதை வைத்து ஒருவரின் வாழ்வை நிர்ணயிக்கிறோம்.

எல்லா உன்னதமான விஷயங்களும் எளிமையானவை, ஒரு வார்த்தையில் சொல்லக்கூடியவை: விடுதலை, நேர்மை, நியாயம், கடமை, கருணை, நம்பிக்கை ...

வின்ஸ்டன் சர்ச்சில்

நீ இவ்வுலகில் பார்க்க விரும்பும் மாற்றம் நீயாக இருத்தல் வேண்டும்!

உன்னுடைய நம்பிக்கைகள் எண்ணங்களாகின்றன. உன்னுடைய எண்ணங்கள் வார்த்தைகளாகின்றன. வார்த்தைகள் செயல்கள் ஆகின்றன. செயல்கள் வழக்கங்கள் ஆகின்றன. வழக்கங்கள் மதிப்பீடுகள் ஆகின்றன. மதிப்பீடுகள் உனது விதியை நிர்ணயிக்கின்றன.

மனதளவில் வன்முறை இருக்கும்போது, வன்முறையாளனாக இருப்பது என்பது, பேடித்தனத்தை அகிம்சை என்ற போர்வையால் மூடி மறைப்பதை விட சிறந்தது!

மகாத்மா காந்தி

எது சரி எது தவறு என்பதை ஒருவர் சுயமாக முடிவு செய்ய வேண்டும். அது போலவே, எது நாட்டுப்பற்று, எது இல்லை என்பதையும் தான்.  உன்னுடைய ஆழமான நம்பிக்கைக்கு எதிராக முடிவெடுப்பது என்பது, உனது சுயத்திற்கும் உன் நாட்டுக்கும் செய்யும் பெரும் துரோகமாகும், பிறர் உன் மேல் எவ்வித முத்திரையை குத்தினாலும் கூட!

மார்க் ட்வைன்

நான் ஏதன்ஸ் நகரவாசியும் அல்லன், கிரேக்கனும் அல்லன், நான் இவ்வுலகத்தின் குடிமகன்!

சாக்ரடீஸ்

எந்தவொரு கணத்தில், மனித உரு என்ற கோயிலில் கடவுள் அமர்ந்திருப்பதை உணர்கிறேனோ
எந்தவொரு கணத்தில், ஒவ்வொரு மனிதனுள்ளும் கடவுளைக் காண முடிகிறதோ
அந்தவொரு கணத்தில், எனது பற்றுக்கள் அனைத்தையும் துறந்து நான் விடுதலை பெறுகிறேன்!

மதம் என்பது, மனிதன் உள்ளிருக்கும் இறைத்தன்மையின் வெளிப்பாடே !

சுவாமி விவேகானந்தர்

Sunday, June 15, 2008

441. எனது கேள்விகளுக்கு ச.சங்கரின் சூப்பர் பதில்கள்... பெனாத்தலாருக்கு சங்கரின் கேள்விகள்

நண்பர் ச.சங்கர் நேற்று நான் இப்பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கு தனது இப்பதிவில் சுவாரசியமாக பதிலளித்திருக்கிறார். மேலும், 4 கேள்விகள் பெனாத்தல் சுரேஷைக் கேட்டு அவரிடம் வம்பு 'வளிக்க' முயற்சி செய்துள்ளார் :)

அவரது வலைப்பதிவில் தமிழ்மணம் கருவிப்பட்டை வேலை செய்யாததால், பதிவை தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை என்று கூறியதால், கேள்வி-பதிலை இங்கே மறுபிரசுரம் செய்திருக்கிறேன். Over to ச.சங்கர் !

எ.அ.பாலா
**************************
பதில்கள் to எ அ பாலா மற்றும் கேள்விகள் to பினாத்தல் சுரேஷ்

பாலா ,
நன்றி மற்றும் கண்டனங்கள். நன்றி என்னை கூப்பிட்டதற்கு . கண்டனங்கள் 4 கேள்விகள் என்ற விதியை!? மீறி உப கேள்விகளுடன் 8 கேள்விகள் கேட்டதற்கு. இப்போது பதில்கள்.

என்றென்றும் அன்புடன் பாலா என்னை இந்தப்பதிவில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே.

1. சமீபத்தில் நீ மேற்கொண்ட தாய்லாந்து விசிட்டின்போது நடந்த சுவாரசியமான நிகழ்வு பற்றிக் கூற முடியுமா ? "களியாட்டங்கள்" பற்றி விவரமாகக் கூறினால், தன்யனாவேன் :)

பாங்காங்கில் ஒருநாள் மாலை சுமார் 8 மணியளவில் ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு சாலையில் போய்க்கொண்டிருந்த போது 2 தாய்லாந்து இளைஞர்கள் இரண்டு அழகான தாய்லாந்து இளம் பெண்களை பலவந்தப்படுத்த முயன்று கொண்டிருக்கும் போது, நான் ஓடிப் போய் அடிதடியில் இறங்கி அந்த இருவரையும் காப்பாற்ற , அந்த இளம் பெண்கள் நன்றியுடன் என்னைக் கட்டிப் பிடித்து உதட்டில்.................என்று சுவாரஸ்யமாக கதை விட ஆசைதான். ...........ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லாமல் ஒரு டூரிஸ்டுக்கே உரித்தான பரபரப்பான ஷெட்யூலுடன் சுற்றிப்பார்த்தல், ஷாப்பிங் தவிர வேறு எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒரு வாரம் போனது என்பதுதான் உண்மை :)
என்னக் கவர்ந்த நிறைய விஷயங்களில் குறிப்பாக இரண்டு..பத்தாயா (pattaya)வில் பார்த்த "அல்கஸார்" என்ற காபரே நடனமும் , இரவு இரண்டு மணிக்கு வாக்கிங் ஸ்ட்ரீட்டில் ஜாலியாக நடந்து போனதும்.

இந்த அல்கஸார் என்பது ஒரு வகையான குழு காபரே நடனம். குடும்பத்துடன் பார்க்கலாம்( நானும் 8 வயது பையன் உட்பட குடும்பத்துடந்தான் போனேன்)1 மணி நேர நிகழ்ச்சியில் கண் முன்னேயூ சர் சர் என்று மாறும் தத்ரூப செட்களும், அதன் பிரும்மாண்டமும், இசைக்கேற்ப நடனமாடும் அழகிகளும், ஐரோப்பிய, சீன , இந்திய( ஒரு ஹிந்தி பாட்டுக்கு ஆடினாங்க..பேக்ரவுண்ட் செட்டிங் சொல்லணுமா?!! தாஜ்மஹால்தான்) , தாய்லாந்து , அரேபிய என அனைத்து கலாச்சாரங்களையும் வெளிப்படுத்தும் நடனங்கள் உண்மையிலேயே உலகத்தரம்.அதுவும் ஒருவர் அர்த்தநாரீஸ்வரர் போல ஒரு பாதி ஆண் உடையுடனும் மறு பாதி பெண் உடையுடனும் நடனமாடி ஆண்பெண் போல ஒரே நேரத்தில் அங்க அசைவு நளினம் காட்டியது ஹை லைட். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு மெயின் டூரிஸ்ட் அட்ராக்க்ஷன். காட்சி முடிவில் நடனம் புரிந்தோருடன் போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம்(தனியாக காசு கட்ட வேண்டும்) . நிகழ்ச்சி முடிந்து பஸ்ஸில் செல்லும் போது எங்கள் கைடு ஆடிய அழகிகள் அனைவருமே " பெண்களாக மாறிய ஆண்கள் " என்று சொல்லி எங்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றார். சில படங்கள் கீழே.




























அடுத்தது இரவு ஏழு மணி வரை மிகத் திராபையாக தூங்கி வழியும் "வாக்கிங் ஸ்ட்ரீட்" (தெரு பேரே அதனுங்கோ) அத்ற்கு மேல் புது மணப் பெண் கோலம் பூண்டு பார்கள், டிஸ்கோ ,மசாஜ் , மாஜிக் மற்றும் கடைகளில் அனைத்து கதவுகளிலும் விலை மாதர்கள் என அதிகாலை 2 மணி வரை உருமாறும் அதிசயம் நேரில் பார்த்தால்தான் நம்ப முடியும். இவ்வளவு இருந்தும் இங்கு எந்த ஒரு விரசமோ அல்லது அசம்பாவிதமும் இல்லாமல் மக்கள் குடும்பத்துடனோ இல்லை தனியாகவோ திருவிழா போல நடந்து செல்வது அதுவும் பெண்கள் தனியாக நடந்து செல்வது பார்த்தாலும் நம்புவது கடினம்,


















2. ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ சித்தாந்தத்தில் (அது குறித்து நிறைய பேசியிருக்கிறீர்கள் கூட!) நம்பிக்கை வைத்திருந்த நீ, எப்போது ஏன் மாறினாய் ? நலிந்தவர் நலனில் அக்கறை இருப்பது போல் நடிக்கும் சந்தர்ப்பவாத இந்திய (போலி) கம்யூனிஸ்ட்களைப் பற்றி உன் கருத்துகள் யாவை ?

முதலமைச்சர் கருணாநிதியின் பாணியில் சொல்வதானால் " இன்னும் நானும் ஒரு கம்யூனிஸ்டுதான் " இப்போது அவர் மாதிரியே என் கம்யூனில் "என் குடும்பம் " மட்டுமே உள்ளது.இது நடுத்தர வர்கத்திற்குள் நடக்கும் ஒரு விஷயம்தான்.மேன்சனில் வசிக்கும் புதிதாக வேலைக்கு வந்த கொஞ்சமேனும் சமூக சிந்தனையுள்ள இளைஞர்கள் கம்யூனிச தாக்கம் இல்லாமல் இளமைப் பருவத்தை கடப்பது மிக அரிது. அப்படிப்பட்ட 10000 பேரில் 1 அல்லது 2 பேர்தான் கடைசிவரை அதே பாதையில் பயணிக்க முடிவதும் கண்கூடு.மற்றவரெல்லாம் சமூக நிர்பந்தம் மற்றும் சுற்றுப் புற சூழ்நிலைகளால் மாறி விடுகின்றனர். என்னை எந்த ஒரு தனி நிகழ்வும் மாற்றவில்லை.படிப்படியாக தாக்கம் குறைந்து விட்டது என்பதே உண்மை.

இந்தியாவைப் பொறுத்தவரை வெவ்வேறு கம்யூனிச குழுக்கள் (சிபிஐ,சிபிஎம்,மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் et all) கம்யூனிச சமுதாயம் நோக்கிய அவர்கள் பாதை என்ன என்று இன்னும் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதுவும் ஓட்டு அரசியலில்(Electoral politics) இருக்கும் சிபிஐ , சிபிஎம் போன்ற கட்சிகளின் கூத்து உச்சகட்டம். 80களில் முதல் எதிரி "நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ " காங்கிரஸ் கட்சி என்றும் அப்படிப்பட்ட கட்சியுடன் எந்தக் கூட்டும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இன்று முதல் எதிரி மதவாத பாஜக . அதனை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டு என்று நிலைபாடு. பாஜகவின் இந்த அசுர வளர்ச்சிக்கு (1980 முதல் 2000 வரை) இவர்களே (இவர்களது அந்தக் காலத்தைய கண் மூடித்தனமான காங்கிரஸ் எதிர்ப்பே) முக்கிய காரணம் என்றே நான் நினைக்கிறேன். இவர்களது முக்கியமான பிற்போக்குத்தனமே "தங்களது தவறுகளை இவர்கள் ஒரு போதும் ஒத்துக் கொண்டதே இல்லை " மற்றவர்களைவிட (atleast on record) அதிகம் படிப்பதால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு மனோபாவமும் வந்துவிடுகிறது. "எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டில் பிழை இருக்காது என்று அர்த்தமோ ?" என்று நக்கீரன் பாணியில் கேட்கத் தோன்றுகிறது. மற்ற படி இவர்களை " போலிகள் " என்று எல்லாவிஷயத்திலும் ஒட்டு மொத்தமாக சொல்வது கொஞ்சம் அதிகப் படிதான் :)

3. ஆணாதிக்கவாதிகள் போல் பெண்ணாதிக்கவாதிகளும் இருக்கிறார்கள் தானே ! அவர்களை எப்படி அடையாளம் காண்பது ? அவர்கள் குணாதிசயங்கள் யாவை ?

இருக்கிறார்கள் . இன்னும் சொல்லப் போனால் ஆண் பெண் உறவில் சமநிலை என்று எதுவும் இல்லை. ஒன்று பெண் அடங்கி இருக்கிறாள் அல்லது ஆண். இரண்டும் இல்லாதது பெரும்பாலும் விவாகரத்தில் அல்லது விவகாரத்தில் போய் முடிகிறது. பெண்ணாதிக்கவாதிகளை (சொந்த / மற்றவர்) அனுபவத்தில் கண்டு கொள்ள வேண்டியதுதான். பெண்ணாதிக்கவாதிகளின் குணாதிசயங்கள் கிட்டத்தட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று இருக்கும் ( give or take some percentage)

4. நாம் மும்பையில் இருந்த காலகட்டத்தில், நண்பர்கள் நாங்கள் தாராவிக்கு விசிட் அடிக்கும்போது, எங்கள் அழைப்பை நீ ஒரு தடவை கூட ஏற்றதில்லை ! என்ன காரணம் என்று இப்போதாவது கூறலாமே ?

தாராவிக்கு நீங்கபோகும் போதெல்லாம் fixed agenda இல்லாமல் போனது முதல் காரணம். பயம் இரண்டாவது ள் காரணம் Adventurist மனோபாவம் எனக்கு இயல்பிலேயே குறைவு என்று நினைக்கிறேன் :) . அது சரி .. இது சபையில் கேட்கவேண்டிய கேள்வியா ?

ஒரு வழியாக 4 கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டேன். நான் 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்றதும் நினைவுக்கு வந்தவர் பினாத்தல் சுரேஷ் அவருக்கான நாலு கேள்விகள்.

1. வலைப்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் திடீரென்று நான் இனிமேல் எழுதப் போவதில்லை என்று வெகுண்டு எழுந்தீர்களே இப்போது "சீனியர் வலிப்பதிவர்களில் ஒருவராக"!??? உங்கள் மனநிலை என்ன ?

2.முதல் காதல் அனுபவம் ( ஒரு தலையாக இருந்தாலும்) எங்கு, எப்போது & கடைசியில் என்ன ஆச்சு?

3.மனைவிக்கு முதல் குழந்தை பிறந்த போது எங்கிருந்தீர்கள்(டெலிவரி வார்ட் முன்பாக நகத்தை கடித்துக் கொண்டா?)? அப்போது மனதில் தோன்றிய எண்ணங்கள் ?

4.பணவீக்கம், விலை வாசி உயர்வு,கச்சா எண்ணை விலை உயர்வு இப்படி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் இந்த தருணத்தில் உங்களை முதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் பிரதமராக (இந்தியாவிற்கு) ஆக்கினால் நீங்கள் எடுக்கும் ஐந்து முதன்மை முடிவுகள் என்னவாக இருக்கும் ?


டிஸ்கி : மேலே கொடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் நானே நேரடியாக சுட்டது.( அட இணையத்தில் இருந்து இல்லைங்க. என் காமராவின் வழியாக.) அதனால் போட்டோ நன்றாக இருந்தால் நான் பொருப்பல்ல.

அன்புடன்...ச.சங்கர்

*****************

Saturday, June 14, 2008

டோ ண்டு சார் கேள்விகளுக்கு உடனடி பதில்கள், ச.சங்கருக்கு 4 கேள்விகள்!

டோண்டு ராகவன் அவர்கள், அவரது இந்தப் பதிவில் என்னிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு எனது பதில்கள் கீழே. இந்த "4 கேள்விகள்" சமாச்சாரம், சங்கிலித் தொடர் போல தொடர வேண்டும் என்று டோ ண்டு சார் சொல்லியிருப்பதால், நான் இப்பதிவின் முடிவில் கேட்டிருக்கும் நான்கு கேள்விகளுக்கு நண்பர் ச.சங்கரை (ஒரு பதிவிட்டு) பதிலளிக்குமாறு அழைக்கிறேன்.

1. சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம், இந்த டோ ண்டு ராகவன் தான் வலைப்பூவுக்கு வந்ததே உங்களால்தான் என்று கூவிக் கூவி வருவதை நினைத்து உங்கள் ரியேக்ஷன்கள் என்ன?

கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தாலும், உங்களைப் போன்ற வலையுலக தாதாவுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது பற்றி சற்று பெருமையே என்பது தான் நிஜம் !!! இளையவர் முதல் பெரியவர் வரை உங்கள் பாப்புலாரிட்டி கொடி கட்டிப் பறப்பது குறித்து கொஞ்சம் பொறாமையும் கூடத் தான் :) சற்று சீரியஸாக, நல்ல வாசிப்பனுபவம் மிக்க, பொதுவாக அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம் உடைய, பல மொழிகளில் புலமை மிக்க, சலிப்பில்லாமல் உழைக்கும் உங்களை தமிழ் வலையுலகுக்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சியே ! வலையுலகு களை கட்டுவது உங்களைப் போன்றவர்களால் தான் என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை !

2. ஸ்கூலில் இம்மாதிரி வாத்தியார்களுக்கெல்லாம் செல்லப் பிள்ளையாக இருந்திருக்கிறீர்கள் (உதாரணம் டி ராமானுஜம் அவர்கள்). இதனால் மற்றப் பசங்களின் பொறாமை மற்றும் எரிச்சல் அதிகமாக இருந்திருக்குமே, இதை எப்படி சமாளித்தீர்கள்?

பலத்த போட்டி இருந்தது. பொறாமை இல்லை அல்லது சில நண்பர்கள் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம். முக்கியமாக, எனது பள்ளித் தோழர்களுக்கு எனது ஏழ்மை நிலை தெரிந்திருந்ததால், என் மீது வாஞ்சை இருந்தது, அதனால் நான் நன்றாக படித்தது குறித்து அவர்களுக்கு பொறாமை கிடையாது என்பது என் எண்ணம்.

ஓரு முறை ஆங்கிலப்பாட ஆசிரியர் திரு D.ராமானுஜம், கட்டுரைப் புத்தகம் எடுத்து வராத மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே செல்லுமாறு பணித்த மறு நிமிடம், அம்மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைப் பார்த்தவுடன், உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைவரையும் அமரச் சொன்ன நிகழ்வை நீங்கள் சுட்டுகிறீர்கள் அல்லவா ? இப்படி ராமானுஜம் போன்ற ஆசிரியர்கள் சில சமயங்களில் அடித்த கூத்தினால், சிலருக்கு சற்று எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம் :) பள்ளி நாட்கள் (ஏழ்மையிலும்) மிக இனிமையாகவே கழிந்தன.
வாசிக்க:
http://balaji_ammu.blogspot.com/2004/10/iv_26.html
http://balaji_ammu.blogspot.com/2005/01/6.html
http://balaji_ammu.blogspot.com/2005/01/7.html


3. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா இங்கிலாந்து (என்று நினைக்கிறேன்) கிரிக்கெட் டெஸ்ட் மேட்சில் இந்தியா ஃபால்லோ ஆன் வாங்கி, மேலே ஆடி மேட்சையும் ஜெயித்ததே. இதற்கு முன்னால் இரு முறை அவ்வாறு நடந்ததாகக் கேள்வி. அவற்றின் விவரங்கள் தர இயலுமா?

நீங்கள் குறிப்பிடுவது இந்தியா vs ஆஸ்திரேலியா என்று நினைக்கிறேன். 2001-இல் நடந்தது. இந்தியா ஃபால்லோ ஆன் வாங்கி, பின்னர் லஷ்மணும் (281), டிராவிட்டும்(180) ஜோடி சேர்ந்து ஒரு கலக்கு கலக்கியதில், கல்கத்தாவில் ஸ்டீவ் வா தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணி மண்ணைக் கவ்வியது. அவர்களது தொடர் (16 போட்டிகள்) வெற்றியும் முடிவுக்கு வந்தது. அவர்களது 'Invincibility' ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

1981-இல் ஹெடிங்க்லியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆட்டம் ஒரு Real Classic. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 401 ரன்கள் எடுத்தது. மைக் பிரயர்லி (இவரை தலைமைப் பண்பு, ஸ்லிப் ஃபீல்டிங் ஆகியவற்றிற்காகவே அணியில் வைத்திருந்தனர் என்றால் அது மிகையில்லை!) தலைமை தாங்கிய இங்கிலாந்து அணி 174 ரன்கள் எடுத்து follow-on வழங்கப்பட்டு, இரண்டாவது இன்னிங்க்ஸிலும் 135-7 என்ற மிக இக்கட்டான நிலையில் இருந்தபோது, இயன் பாத்தம், வால் முடிவாட்டக்காரர்களோடு (Tailenders:)) கூட்டு சேர்ந்து ஒரு காட்டு காட்டியதில், இங்கிலாந்து 356 ரன்கள் குவித்து (பாத்தம் 149 நாட் அவுட்) ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 130 ரன்களை நிர்ணயித்தது. பின்னர், ஆஸ்திரேலிய அணி பாப் வில்லிஸின் (8-43) வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், 111-க்கு (இதை நெல்சன் என்று அழைப்பர்! அதாவது, அதிர்ஷ்டமில்லா எண்!) சுருண்டு, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது வரலாறு !

இதற்கு முன்னர், 1894-85 Ashes-இல், ஸிட்னியில் நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 586 ரன்கள் குவித்த பிறகு, இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்தது. Follow-on செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து, திடமாக ஆடி, 437 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 177 ரன்களே ! நான்காவது நாள் முடிவில், ஆஸ்திரேலியா 113-2 என்ற ஸ்கோரில் Driver's seatஇல் இருந்ததென்னவோ நிஜம் ! இரவு பெய்த மழையின் காரணமாக, இறுதி நாளில் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு பயங்கரமாக உதவியதில், ஆஸ்திரேலியாவின் ஆட்டம் க்ளோஸ் :) 166 ரன்களில் சுருண்டு, இங்கிலாந்து 10 ரன்களில் வென்று ஒரு Famous Victory !!! தொடரையும் 3-2 என்ற கணக்கில், இங்கிலாந்து வென்றது.

4. மனைவி/மகள்களின் பிறந்த நாளை மறந்து அசடு வழிந்தது உண்டா?

மகள்களின் பிறந்த நாளை நிச்சயம் மறப்பதற்கு வாய்ப்பே இல்லை !!! மனைவியிடம் (வேலைப்பளு காரணமாக) ஓரிரு முறை நிகழ்ந்துள்ளது. ஒரு சமயம், மனைவியின் பிறந்த நாளுக்கு வேண்டி (ஒரு வாரத்திற்கு முன்னதாகவே) ஒரு பரிசு வாங்கி வைத்து விட்டு, அதை பிறந்த நாளில் கொடுக்க மறந்து, திடீரென்று ஞாபகம் வந்து, அவரை அன்றிரவு ஒரு மணிக்கு தூக்கத்திலிருந்து எழுப்பி, வாழ்த்து சொல்லிக் கொடுத்தது, அசடு வழிவதில் சேருமா என்று டோ ண்டு சார் தான் கூற வேண்டும் :)

ச.சங்கருக்கு 4 (சற்று ஏடாகூடமான) கேள்விகள்:

1. சமீபத்தில் நீ மேற்கொண்ட தாய்லாந்து விசிட்டின்போது நடந்த சுவாரசியமான நிகழ்வு பற்றிக் கூற முடியுமா ? "களியாட்டங்கள்" பற்றி விவரமாகக் கூறினால், தன்யனாவேன் :)

2. ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ சித்தாந்தத்தில் (அது குறித்து நிறைய பேசியிருக்கிறீர்கள் கூட!) நம்பிக்கை வைத்திருந்த நீ, எப்போது ஏன் மாறினாய் ? நலிந்தவர் நலனில் அக்கறை இருப்பது போல் நடிக்கும் சந்தர்ப்பவாத இந்திய (போலி) கம்யூனிஸ்ட்களைப் பற்றி உன் கருத்துகள் யாவை ?

3. ஆணாதிக்கவாதிகள் போல் பெண்ணாதிக்கவாதிகளும் இருக்கிறார்கள் தானே ! அவர்களை எப்படி அடையாளம் காண்பது ? அவர்கள் குணாதிசயங்கள் யாவை ?

4. நாம் மும்பையில் இருந்த காலகட்டத்தில், நண்பர்கள் நாங்கள் தாராவிக்கு விசிட் அடிக்கும்போது, எங்கள் அழைப்பை நீ ஒரு தடவை கூட ஏற்றதில்லை ! என்ன காரணம் என்று இப்போதாவது கூறலாமே ?

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, May 27, 2008

439. IPL கிரிக்கெட்டில் நேற்று!

முந்தைய பதிவில் உம்மாச்சியை வேண்டிக் கொண்டதன் தொடர்ச்சியாக நேற்றைய (ஜெயிக்க வேண்டிய) IPL ஆட்டத்தில், மும்பை அணி தனது "முழுத்திறமையையும்" வெளிப்படுத்தி, ராஜஸ்தான் ராயல் அணியிடம் தோற்றது.  சச்சினின் ஜாதக ராசி அப்படி, அவர் இந்தியாவுக்கு ஆடினாலும் சரி, மும்பைக்கு ஆடினாலும் சரி, அவர் ஓரளவு நன்றாக ஆடினால், அந்த ஆட்டம் கோவிந்தா தான் ;-)

சில தினங்களுக்கு முன் மொஹாலி அணியிடம் ஒரு ரன்னில் தோற்ற மும்பை அணி, நேற்று கடைசிப் பந்தில் ஆட்டத்தை கோட்டை விட்டது.  3 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில், பரபரப்பு காட்டாமல், சிறப்பாக ஆடிய நீரஜ் பட்டேலையும், ரவீந்திர ஜடேஜாவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்! கடைசி ஓவரை ஜெயசூர்யாவோ, ஆஷிஷ் நெஹ்ராவோ வீசியிருந்தால், மும்பை வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.  Retrospective Analysis-இல் எ.அ.பாலாவை மிஞ்ச ஆள் கிடையாது என்று யாரோ முணுமுணுப்பது காதில் கேட்கிற மாதிரி இருக்கிறது :)

இந்த மும்பைத் தோல்வியால் தில்லி அணிக்கு லாபம், அவ்வணி அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது !!!  சேவாக் வார்னுக்கு நன்றிக்கடன் பட்டவராகி விட்டார் :) இப்போது, அரைஇறுதி சுற்றில் நான்காவது அணியாக தேர்வாகப் போவது சென்னையா, மும்பையா என்பது தான் கேள்வி!  இன்றைய ஐதரபாதுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால், மும்பைக்கு (அவ்வணி தனது அடுத்த ஆட்டத்தில் வென்றாலும்!) சங்கு ஊதப்படும்!

சச்சினும், மும்பையும் இருக்கிற கடுப்பில், பெங்களூருக்கு எதிரான இறுதி ஆட்டத்தில், பெங்களூரை மும்பை மிதித்துத் தேய்த்து விடும் அபாயம் இருப்பதால், மும்பை பெங்களூரிடம் தோற்று அதனால் சென்னை அணி  அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று நம்புவதைக் காட்டிலும், "நம் கையே நமக்குதவி" என்ற பழமொழிக்கு ஏற்ப, இன்றே ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்று சென்னை தகுதி பெறுவதே சிலாக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. 

மேலும், லட்சுமி ராய் ஆட்டத்தைப் பார்க்க இன்று ஐதரபாத்துக்கு செல்ல மாட்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ;-)  அதனால், கேப்டன் தோனி கவனம் சிதறாமல் ஆடி, சென்னை அணிக்கு வெற்றிக் கனியை பறித்துத் தருவார் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது :)

எ.அ.பாலா

Monday, May 26, 2008

438. IPL 20-20 கிரிக்கெட் - தாதா,சென்னை,தோனி,லட்சுமி ராய் ...

IPL கிரிக்கெட் ஆட்டங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தாலும், ஆபீஸ் வேலை சற்றே கடுப்படிப்பதாலும், தோள்பட்டை சம்பந்தப்பட்ட ஒரு புது வியாதி (Peri Arthritis) என்னை பாடாய் படுத்துவதாலும், குறிப்பிடத்தக்க சில IPL ஆட்டங்கள் (மும்பை அணியை ஒரு ரன்னில் மொஹாலி அணி வென்ற ஆட்டம் போல...) பற்றி பதிவெழுத முடியாமல் போனது.

கொல்கத்தா - மொஹாலி அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஆட்டத்தில், பாய்காட் அவரை 'பிரின்ஸ் ஆப்ஃ கல்குட்டா' என்றழைப்பதற்கும், பெங்காலியர்கள் அவரை 'தாதா' என்று மாய்ந்து போவதற்கும் ஆன காரணத்தை விளக்கும் வகையில் கங்குலி ஓர் அதிரடி ஆட்டம் ஆடியதில்,(மிக உறுதியான!) தோற்கும் சூழலிலிருந்த கொல்கத்தா, கடைசி 5 ஓவர்களில் 71 ரன்களை ஈட்டி அபார வெற்றி பெற்றது.

Ganguly's final assault literally turned the match on its head ! இர்பான் பதான் வீசிய இறுதி ஓவரில் கங்குலியின் விளாசல், வெற்றிக்குத் தேவையான 15 ரன்களை (இதில் 2 சிக்ஸர்கள்) நான்கே பந்துகளில் பெற்றுத் தந்தது. ஈடன் கார்டன் அரங்கில் எழுந்த பேரிரைச்சல், எரிமலை வெடித்தது போல இருந்தது. இந்த மகத்தான வெற்றியின் மூலம் கொல்கத்தா அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை என்றாலும், "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்பது கங்குலிக்குப் பொருந்தும் !!!

சனிக்கிழமை நடந்த சென்னை-ஜெய்ப்பூர் ஆட்டமும் விறுவிறுப்பாக இருந்தது. ஜெய்ப்பூரின் 211 ரன்களை சென்னை அணி சிறப்பாகவே 'துரத்தியது', ஆனாலும், 201 ரன்கள் எடுத்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்திலும், (கொல்கத்தா-மொஹாலி ஆட்டம் போலவே!) கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் சென்னைக்கு வெற்றி என்ற நிலை இருந்தது. கங்குலியைப் போல நமது கேப்டன் தோனி கடைசி வரை நின்று ஆடவில்லை என்பது பெரிய குறை. தோனிக்கு லட்சுமி ராயை சந்திக்க வேண்டிய அவசரம் போலும் ;-) முக்கியமான கட்டத்தில், 18-வது ஓவரில் விக்கெட்டை பறி கொடுத்து விட்டார் !!! கிரிக்கெட் பற்றி ஒரு இழவும் தெரியாத லட்சுமி ராய் மற்றும் சில கோலிவுட் குமரிகள் சேப்பாக்கம் பக்கம் வராமல் இருந்திருந்தால், தோனி நிதானமாக ஆடியிருப்பாரோ ????

சனிக்கிழமை நடந்த 2-வது IPL ஆட்டத்தில் (மும்பை vs தில்லி) மும்பை வென்றிருந்தால், சென்னைக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும். அன்றே அரை இறுதிக்கு (ஐதராபாதுடனான அடுத்த ஆட்டத்தில் நாம் தோற்றாலும் கவலையில்லை!) சென்னை தகுதி பெற்றிருக்கும் ! தில்லிக்கு ஆடும் தமிழ்நாட்டுக்காரர் தினேஷ் கார்த்திக் தனது 15 நிமிடப் புகழுக்கு அந்த தினத்தை தேர்வு செய்ததில், மும்பை மண்ணைக் கவ்வி, அரை இறுதித் தேர்வுக்கு, நமது மற்றும் மும்பை அணிகளின் வாய்ப்பு கவலைக்கிடமாகி விட்டது !!! சென்னையின் இந்த ரெண்டுங்கெட்டான் நிலைமைக்குக் முக்கியக் காரணம், ஜெயிக்க வேண்டிய (பெங்களுருக்கு எதிரான) ஆட்டத்தில், உயிரைக் கொடுத்து தோற்றது தான், chennai snatched Defeat from the Jaws of Victory :( அந்த ஆட்டத்திற்கும் லட்சுமி ராய் வந்திருந்து தையத்தக்கா என்று குதித்ததில், தோனி சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது !!!

சென்னையின் நெட் ரன்ரேட் மைனஸில் இருப்பதால், ஐதராபாதுடனான அடுத்த ஆட்டத்தில் நாம் வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்கு தகுதி பெறலாம். இல்லையெனில், மும்பை அடுத்த 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும் என்று ஒம்மாச்சியை வேண்டிக் கொள்ளலாம் :)

எ.அ.பாலா

437. கன்னட வெறியர் மற்றும் நடிகர்கள் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தோல்வி

தட்ஸ்டாமில்.காம் வலைத்தளத்தில் வந்துள்ள ஒரு செய்தியை கீழே தந்துள்ளேன்.  வா(மு)ட்டாள் நாகராஜ் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்துள்ளார்.  பல கன்னட நடிகர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.  இதிலிருந்து இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

1. பெரும்பாலான கன்னடர்கள் மற்றொரு (தமிழ்நாடு) மாநில மக்களுக்கு எதிரான வெறிச் செயல்களை தூண்டி விடுபவர்களை புறக்கணிக்கின்றனர். அவர்கள் அண்டை மாநிலத்தவருடன் சுமுகமான உறவையே விரும்புகின்றனர்.  தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வியாதிகள் தான் வெறுப்புக்கு தூபம் போட அலைகின்றனர் :(

2. தமிழ்நாட்டில் நிலவுவது போல, கர்நாடகத்தில் சினிமா மோகம் தலை விரித்து ஆடவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.  Rajkumar was an exception !

இனி செய்தியை வாசிக்கவும்.
************************

வாட்டாள் நாகராஜ் தோல்வி-டெபாசிட்டையும் இழந்தார்
திங்கள்கிழமை, மே 26, 2008
  
     
பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ், டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார்.

கன்னட சளுவாளி இயக்கம் என்ற அமைப்பின் தலைவர்தான் வாட்டாள். இதுதவிர கர்நாடக எல்லைப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

தமிழர்களுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருபவர் வாட்டாள். தமிழர்களுக்கு எதிரானவர். சமீபத்தில் கூட ஓகனேக்கல் விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்.

முன்னாள் எம்.எல்.ஏவான வாட்டாள், சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில், புட்டரங்க ஷெட்டி, பாஜக சார்பில், மகாதேவ் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஷெட்டி வெற்றி பெற்றார். வாட்டாள் நாகராஜ், வெறும் 11, 413 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டைப் பறிகொடுத்து படுதோல்வி அடைந்தார்.

பாட்ஷா நடிகர் தோல்வி:

தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல நடிகர்களும் போட்டியிட்டனர். இவர்களில் நடிகர் ஜக்கேஷ் தவிர மற்ற அனைவருமே தோல்வியைத் தழுவியுள்ளனர்.

காங்கிரஸ் எம்.பியான அம்பரீஷ், ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதியில் போட்டியிட்டார். காவிரிப் பிரச்சினையின் போது தனது மத்திய அமைச்சர் பதவியை உதறியவர் அம்பரீஷ். ஆனால் காவிரிப் படுகையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பாட்ஷா படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்திருந்த நடிகர் சசிகுமார், காங்கிரஸ் வேட்பாளராக செல்லகரே தொகுதியில் போட்டியிட்டார். அவரும் தோற்றுப் போய் விட்டார்.

காமெடி நடிகை உமாஸ்ரீயும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

இதேபோல நடிகர் சாய்குமார் பாஜக வேட்பாளராக பாகேபள்ளி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். இயக்குநர் - நடிகர் மகேந்தர், கொள்ளேகால் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

காமெடி நடிகரும், ரஜினியைப் போலவே இமிடேட் செய்து நடிப்பவருமான ஜக்கேஷ் மட்டும் இத்தேர்தலில் வெற்றியை சுவைத்துள்ளார். இவர் துருவகரே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

9வது முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் தரம்சிங இத்தேர்தலில் வென்றிருந்தால் சாதனை படைத்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தோல்வியுற்று விட்டார். அதே சமயம், 9வது முறையாக போட்டியிட்ட மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார்.

இருப்பினும் கடந்த 8 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்ட கார்கே இந்த முறை தொகுதி மாறி போட்டியிட்டதால் அவருக்கு சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
******************************

நன்றி: தட்ஸ்டாமில்.காம்

Thursday, May 08, 2008

436. செல்லாது! செல்லாது! - வேணுகோபால் பணி நீக்கம் பற்றி சுப்ரீம் கோர்ட்

வேணுகோபால் நீக்கம் சட்டவிரோதம்-சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
டெல்லி: டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) இயக்குநர் பதவியிலிருந்து டாக்டர் வேணுகோபாலை நீக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

எய்ம்ஸ் இயக்குநராக இருந்து வந்த டாக்டர் வேணுகோபாலுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பெரும் மோதலாக வெடித்தது.

இந்த நிலையில், எய்ம்ஸ் மாணவர்கள், வேணுகோபாலுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இதற்கு வேணுகோபால்தான் காரணம், அவர்தான் போராட்டத்தைத் தூண்டி விட்டு வருகிறார் என்று அன்புமணி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், வேணுகோபாலுக்கு எதிராக தீவிர நடவடிக்கையிலும் இறங்கினார் அன்புமணி. அதன் உச்சகட்டமாக நாடாளுமன்றத்தில் வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றினர்.

அதன்படி 65 வயதை டாக்டர் வேணுகோபால் தாண்டி விட்டதால், அவர் இயக்குநர் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறி இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து டாக்டர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று இன்று அதிரடித் தீர்ப்பை அளித்தது.

வேணுகோபால் தாக்கல் செய்த மனுவில், தனது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இருப்பதாகவும், இந்த நிலையில் சட்டத் திருத்தம் மூலம் தன்னைப் பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, ஹரிஜித் சிங் பேடி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது, இது சட்டவிரோதமானது. மனுதாரரை மட்டுமே குறி வைத்து இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மிகவும் பாரபட்சமாக, தன்னை குறி வைத்து இந்த நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மனுதாரர் கூறியதை இந்த நீதிமன்றம் ஏற்கிறது.

இந்த வழக்கிலும், எய்ம்ஸ் ஊழியர் சங்கம் தாக்கல் செய்துள்ள இதே வழக்கிலும் இறுதித் தீர்ப்பு வரும் வரை இயக்குநர் பதவிக்கு நிரந்தரமாக யாரையும் மத்திய அரசு நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எய்ம்ஸ் இயக்குநராக டாக்டர் வேணுகோபாலை மீண்டும் நியமிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜூலை மாதம் வரை அவர் தொடர்ந்து பதவி வகிக்கவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்கிய பின்னர் டாக்டர் டோக்ரா இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

நன்றி: thatstamil.oneindia.in


டெயில் பீஸ்:

இத்தீர்ப்பு பாராளுமன்ற முடிவுக்கு எதிரானது போல் தோன்றினாலும், அமைச்சர் அன்புமணி, வேணுகோபாலை விரட்டுவதற்காகவே, இந்த சட்டத் திருத்தத்தை பாராளுமன்றம் முன் வைத்து அது நிறைவேற்றப்பட்டது என்பது தெளிவாகவே தெரிகிறது! வேணுகோபாலோடு முட்டிக் கொள்வதற்கு முன்பாகவே, அமைச்சர் இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருந்தால், சுப்ரீம் கோர்ட் 'சட்டத் திருத்தம் செல்லாது' என்று கூறியிருக்காது. அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை, தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளுக்கு இடம் தரும் வகையில் பயன்படுத்தக் கூடாது என்பது இத்தீர்ப்பின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேணுகோபாலின் பதவிக் காலம் இன்னும் 2 மாதங்களில் (ஜூலை 2008) முடிவுக்கு வருகிறது, நல்ல வேளை தீர்ப்பு அதற்கு முன்பே வந்து விட்டது :)

தற்போது அமைச்சர், 'இது மத்திய அரசின் முடிவு, எனது தனிப்பட்ட முடிவு அல்ல, அதனால், இந்த தீர்ப்பு தொடர்பாக தான் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று கூறியதாக ஒரு செய்தியில் வந்திருக்கிறது. (CNN-IBN).

வேணுகோபால் தொடர்பான எனது முந்தைய பதிவுகள்:
http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_07.html
http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_09.html

எ.அ.பாலா

Thursday, April 24, 2008

435. விவேகானந்தர் இல்லப் பிரச்சினை - தமிழக அரசு பல்டி ?

லேடி வில்லிங்க்டன் பள்ளிக்கு அருகில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில், தமிழ்ச் செம்மொழி மையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அரசின் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள், "விவேகானந்தர் இல்லத்தை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேறு கட்டடத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் தமிழ் செம்மொழி மையம் அமையவுள்ளது" என்று வாய்மொழியாக அரசின் எண்ணத்தை மடத்தின் பொறுப்பாளர்களிடம் தெரிவித்ததாகவும், ஊடகங்களில் செய்திகள் வந்தன. 

மேலும், இது குறித்து ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தர் கூறியதாவது:

எங்களது மடத்திற்கு தொடர்பு கொண்ட தொழில் அதிபர் ஒருவர், "விவேகானந்தர் இல்லம் உள்ள இடத்தை முதல்வர் கருணாநிதி காலி செய்யச் சொல்லியுள்ளார். எனவே, காலி செய்து கொடுத்து விடுங்கள்' என எங்களது மேலாளரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், "மடத்தின் தலைவர் வெளியூர் சென்றுள்ளார். அவர் 23ம்தேதி திரும்புவார். அவர் வந்ததும் தகவல் தெரிவித்து, முதல்வரை சந்திக்க சொல்கிறேன்" என பதில் தெரிவித்துள்ளார். பிறகு, மீண்டும் தொடர்பு கொண்ட அந்த தொழிலதிபர், "முதல்வரிடம் நீங்கள் சொன்னதை தெரிவித்தேன். உங்கள் தலைவர் 23ம்தேதி சென்னை திரும்பியவுடன் 24ம்தேதி இடத்தை காலி செய்து விடுங்கள். அதன் பின் வேண்டுமானால் என்னை வந்து சந்திக்கட்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்" எனக் கூறினார்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, அந்த தொழில் அதிபர் நேரடியாக முதல்வரின் பெயரைச் சொல்லி  வி.இல்லத்து மேலாளரை (இடத்தை காலி செய்ய வேண்டி) அரசியல் ரீதியாக அச்சுறுத்திய சமாச்சாரம் தான் :(

அரசின் கட்டாயத்தால், எங்கே வி.இல்லத்தை காலி செய்து கொண்டு ராமகிருஷ்ணா மடத்தினர் சென்று விடுவார்களோ என்று எண்ணிக் கொண்டு, பல வருடங்களுக்குப் பின் மீண்டும் விவேகானந்தரின் நினைவு இல்லத்துக்கு நேற்று ஒரு விசிட் அடித்தேன்.  நேற்று வி.இல்லத்திற்கு வார விடுமுறையாக இருந்தும், (நுழைவுக் கட்டணம் இல்லாமல்) எனக்கு ஸ்பெஷல் அனுமதி கிடைத்தது சுவாமி விவேகானந்தரின் அருள் தான் ! 

அமைதியான, ரம்யமான சூழல் !  இந்து சமயம் பற்றி ஒரு முகவுரை தரும் வகையில் போஸ்டர்களும், ஓவியங்களும், சுவாமிஜியின் அறிவுரைகளும், அவரது வாழ்க்கை குறிப்புகளும், புகைப்படங்களும், மூன்று தளங்களில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் காணப்பட்டன.  சுவாமிஜி, ராமகிருஷ்ணர் மற்றும் இந்து சமயம் சார்ந்த அருமையான புத்தகங்கள் விற்பனைக்கு இங்கு கிடைக்கின்றன. 

1893-இல் சிகாகோ உலக சமய பாராளுமன்றத்தில் சுவாமிஜி, உலகப் பிரசித்தி பெற்ற சமய / தத்துவச் சொற்பொழிவுகளை வழங்கி விட்டு, ஒரு நான்காண்டுகள் உலகப்பயணத்திற்குப் பின், 1897-இல் சென்னைக்கு இரண்டாம் முறை வந்தபோது, ஒரு வார காலம், வி.இல்லத்தில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தார். அந்த அறை தற்போது (விரும்புபவர்கள்) தியானம் செய்ய பயன்படுகிறது.  தியானத்தையே மனிதனின் பல இடர்களுக்கு மருந்தாக சுவாமிஜி பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

வி.இல்லத்தை அரசு காலி செய்ய வற்புறுத்திய பிரச்சினைக்கு மீண்டும் வருவோம் !

இப்போது எல்லாமே தலைகீழாக மாறியது போலத் (அல்லது, முதல்வர் பெயரை அந்த தொழிலதிபர் தவறாகப் பயன்படுத்தியது போலத்) தெரிகிறது , முதல்வர் கருணாநிதி இன்று சட்டசபையில் கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால் !!!  அதாவது,
 
விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  தமிழ் செம்மொழி ஆய்வு மையத்திற்காக விவேகானந்தர் இல்லத்தை இடிப்பது தொடர்பாக சட்டசபையில் இன்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து பேசிய முதல்வர், விவேகானந்தர் மீது தனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்றும், விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்றும் கூறினார். 

என்ன தான் நடந்தது / நடக்கிறது / நடக்கப்போகிறது என்பது சுவாமிஜிக்கே வெளிச்சம் !!!! 

எ.அ.பாலா

நன்றி: தினமலர்

Thursday, April 10, 2008

27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் : சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசின் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் ஓ.பி.சி., பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓ.பி.சி., சான்றிதழில் கிரீமி லேயர் இருக்காது எனவும் கூறியுள்ளது.

நன்றி: தினமலர்

எம்.எல்.ஏ, எம்.பி வாரிசுகள் இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல செய்தி.

Tuesday, April 08, 2008

433. ஓகேனக்கல், வக்கீல்கள், சினிமாக்காரர்கள், அரசியல் et al ...

ஒகேனக்கல் பிரச்சினை குறித்து சில எண்ணங்கள்:

1. இப்பிரச்சினைக்கு மூல காரணம் பிஜேபியின் எட்டியூரப்பா தான் என்றாலும், நமது முதல்வர் 'எலும்பு''முறிவு' பற்றி பேசாமல் இருந்திருந்தால், பிரச்சினை இவ்வளவு பெரிதாகியிருக்காது தான்! கர்னாடகத்தில் வாழும் தமிழர்கள் மேல் பாய வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த (கன்னட ரக்ஷண வேதிகே மற்றும் வட்டாள் நாகராஜ் சார்ந்த அமைப்புகளின்) கன்னட வெறியர்களுக்கு (பெங்களூரில் தமிழர்க்கு எதிராக வன்முறையில் இறங்குவதற்கு) முதல்வரின் பேச்சு, காரணத்தை ஏற்படுத்தித் தந்தது.

2. அது போலவே, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்த பிறகு, திடீரென்று '2 மாதம் ஒத்தி வைப்பு' என்று தன்னிச்சையாக தமிழக முதல்வர் முடிவெடுத்தது, எட்டியூரப்பாவின் 'வாக்கு வங்கி' அரசியலுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல! கன்னட வெறியர்களின் வன்முறை குறித்த ஞானோதயம் அன்னாருக்குத் திடீரென்று தோன்றியது ஆச்சரியமாக உள்ளது :(

3. சட்டத்தைக் கையில் எடுத்து செயல்படுவதிலும், வன்முறையிலும் மிகுந்த ஆர்வம் காட்டும் நமது வழக்கறிஞர்கள், சங்கீதா உணவகங்களில் செய்த கலவரம் மிக்க கண்டனத்துக்குரியது! சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் செய்கிற காரியமா இது ?

4. 'உலகப்பொதுமறை' என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றிய வள்ளுவனுக்கே பெங்களூரில் சிலை அமைக்க, பல காலமாக கன்னட வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது, நாம் அறிந்தது தானே! கன்னட (வெறி) அமைப்புகள், பெங்களூர் வாழ் தமிழர்களால் கன்னடர்களின் வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படுவது போல ஒரு (தவறான) சிந்தனையை, சாமானிய கன்னடர்களின் மனதில் சிறிது சிறிதாக விஷம் போல ஏற்றியுள்ளதே, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்.

5. அடுத்து, தமிழ்த் திரைப்படத் துறையினரின் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நிச்சயம் தேவையில்லாத ஒன்று. இவர்களுக்குத் தான் தமிழுணர்வு வழிவது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்! அன்று பேசிய சிலரின் (முக்கியமாக சத்தியராஜ்!) பேச்சு, கர்னாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு மேலும் தலைவலி உண்டாக்குமே அன்றி, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க எவ்வகையிலும் உதவாது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஜால்ரா போடுவதில் வல்லவர்களான திரைப்படத் துறையினர், தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் அனைவருக்கும் நலம்!

ரஜினி மேல் சத்யராஜுக்கு இருக்கும் பொறாமையும், காழ்ப்பும், அவரது அன்றைய பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது. "பெரியார்" படத்தில் நடித்து விட்டதாலேயே தனக்கு ஒரு 'சிறப்புத் தகுதி' வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் சத்யராஜ் கூட்டத்தில் அத்தனை தாறுமாறாகப் பேசியும், அவரது பேச்சை ஒதுக்கித் தள்ளிய கன்னட வெறியர்கள், ரஜினியின் சாதாரணமான பேச்சை திரித்து, அவர் மீது பாயத் தொடங்கி உள்ளனர்! இந்த ஒரு விஷயத்திலேயே, சத்யராஜ் பேச்சுக்கு எந்த அளவு மதிப்பு உள்ளது / முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது கண்கூடு!

திரைப்படத் துறையினர் இப்படி நடந்து கொண்டதால், 'தமிழ் திரைப்படங்களுக்குத் தடை' என்ற எதிர்மறை விளைவு ஏற்பட்டு, அவர்களுக்குத் தான் நஷ்டம்!

6. "கண்ணுக்குக் கண்" என்பது எந்தப் பயனும் அளிக்காது என்பதை அனைவரும் (விடுதலைச் சிறுத்தைகள் உட்பட) புரிந்து செயல்பட வேண்டும். இங்கு சுகமாக, பத்திரமாக உட்கார்ந்து கொண்டு கர்னாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்படுவது போல பேசுவதும், செயல்படுவதும் தவறில்லையா ? தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் பெங்களூர் தமிழ் சங்கமே, கன்னட அமைப்புகளுக்கு ஆதரவான நிலை எடுக்கத் தள்ளப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது!

7. 1998-இல் கர்னாடகவுடன் ஒகேனக்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே, இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு மெத்தனப் போக்கை கடைபிடித்ததும் கூட, இப்போது உருவாகியிருக்கும் பிரச்சினைக்கு ஒரு முக்கியக் காரணம்! மேலும், இக்குடிநீர் திட்டத்தை அப்போதே நிறைவேற்றியிருந்தால் குறைந்த செலவே (350-400 கோடியில்) ஆகியிருக்கும். தற்போதைய திட்டச் செலவு மதிப்பீடு 1334 கோடி!!!

8. தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையே பிராந்திய ரீதியில் குறுகிய நோக்குடன் செயல்படும்போது, மாநிலக் கட்சிகள் பற்றிப் பேசிப் புண்ணியமில்லை! வட இந்தியர்களுக்கு எதிராக ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா நடத்திய வன்முறை, தற்போதைய சூழலில் நினைவு கூரத் தக்கது. இது போன்ற பிரிவினைவாத அவலங்கள் தொடருமானால், ஏற்கனவே நம்மிடையே விரவி இருக்கும் சாதி/மத/இனப் பிரச்சினைகள் தீவிர நிலையை அடைந்து, சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட கதி (உடனடியாக இல்லாவிட்டாலும்!) இந்தியாவுக்கும் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தோன்றுகிறது!

Final Word: காவிரிப் பிரச்சினை போல, முல்லைப் பெரியார் போல, ஓகேனக்கல் பிரச்சினைக்கும் வெகு நாட்களுக்கு எவ்வித தீர்வும் ஏற்படப் போவதில்லை என்பது தான் நிதர்சனம். இன்னும் 2-3 மாதங்களில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, இந்த விஷயத்தில் ஆர்வம் போய் விடும். திரும்பவும் யாராவது கிளப்பி விடும் வரை, மக்களும் சரி, ஊடகங்களும் சரி, இப்பிரச்சினையை மறந்து இருப்பார்கள் !!!

எ.அ.பாலா

Monday, April 07, 2008

வ(மு)ட்டாள் நாகராஜ் பேட்டி

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் கர்நாடக மக்களுக்கு என்ன விதமான பாதிப்புகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

(நாகராஜுக்கு அதுபற்றி உடனடியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. சிறிது யோசித்து விட்டே பேசினார்). ??அது எங்கள் நாட்டுத் தண்ணீர். அது எங்கள் மக்களுக்குத்தான் பயன்படணும். அதைத் தமிழ் மக்கள் குடிக்கக் கொடுக்க மாட்டோம். அப்படி நடந்தால் என்ன செய்வோம் என்றே எங்களுக்குத் தெரியாது. உயிரைக் கொடுத்தாவது அந்தத் திட்டத்தைத் தடுப்போம். எங்களிடம் (கர்நாடக அரசிடம்) கேட்காமல் எப்படி அந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது? அது எல்லாமே கர்நாடக இடம்தான். எங்களிடம் அனுமதி பெற்றுத்தான் அங்கே கையை வைக்க வேண்டும்.??

எது உங்கள் இடம் என்கிறீர்கள்? ஒகேனக்கல் பகுதி, தமிழக எல்லைக்குள்தானே வருகிறது?

??அதெப்படிச் சொல்வீர்கள்? தமிழகத்தில் உள்ள தலைவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜம் என்ன தெரியுமா? கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகமண்டலம் எல்லாமே கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானதுதான். எல்லாவற்றையும் தமிழர்கள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, கர்நாடகத்திடம் கருத்துக் கேட்காமல் கைவைப்பது எவ்வளவு பெரிய தப்பு என்று தமிழ்நாட்டுக்காரர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் இத்தனை எதிர்ப்பைக் காட்டுகிறோம்.??

அதற்காக தமிழகத் தலைவர்களின் படத்தை எரிப்பதும், திரையரங்குகளைச் சேதப்படுத்துவதும் சரியானதா?

??என்ன செய்யச் சொல்கிறீர்கள்? கன்னட மொழிப் பற்றாளர்கள் அவர்கள். எங்களைப் போல அவர்கள் பாணியில் போராட்டங்களைச் செய்கின்றனர். அதெல்லாம் வேண்டாம் என்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எங்கள் மண் மீது கண் வைக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்.??

கர்நாடக மாநில எல்லையைக் கடந்து, நீர் அளவை நிலையத்தைத் தாண்டி அதற்கு அப்பால்தான் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான இடத்தையே குறிப்பிட்டிருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்கும் போது கர்நாடக மக்களுக்கு எப்படி தண்ணீர் பிரச்னை வரும்?

??அதுதான் ஏற்கெனவே சொன்னேனே. புரியவில்லையா உங்களுக்கு? கிருஷ்ணகிரி வரைக்கும் கர்நாடக மாநிலம்தான் என்கிறபோது, தமிழக அரசு தேர்வு செய்துள்ள இடமும், கர்நாடக அரசுக்குச் சொந்தமானதுதானே? நீங்கள் ஒகேனக்கல்லை மறந்து விடுங்கள். நாங்கள் போராட்டத்தை மறந்து விடுகிறோம்.??

கேபிள் ஆபரேட்டர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளீர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதே?

??தமிழ் சேனல்களை மட்டும் ஒளிபரப்பக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். கேபிள் ஆபரேட்டர்களும் கூட்டம் போட்டு, உண்ணாவிரத தினத்தில் மட்டும் ஒளிபரப்பைத் தடை செய்து, மற்ற நாட்களில் கலைஞர் சேனலைத் தவிர மற்ற தமிழ் சேனல்களை ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளனர். ஒகேனக்கல் பிரச்னை தீர்கிறவரை கர்நாடகாவில் கலைஞர் தொலைக்காட்சியை அவர்கள் காட்ட மாட்டார்கள், காட்டவும் முடியாது.??

எதற்காக அந்தக் குறிப்பிட்ட சேனல் மீது இவ்வளவு கோபம்?

??ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அறிவித்தவர் கருணாநிதி. அவருடைய சேனல்தானே அது? அதில் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவாக செய்தியைப் பரப்பி விடுவார்கள். அதனால்தான் அந்தக் குறிப்பிட்ட சேனலை மட்டும் பிரச்னை தீர்கிறவரை ஒளிபரப்பக்கூடாது என்கிறோம். அதேபோல், கருணாநிதியின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மத்திய அரசை மிரட்டியே பணிய வைக்கிறார். மத்திய அரசை தனது சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறார். கருணாநிதியை நாடு கடத்த வேண்டும். மத்திய அரசை ஏமாற்றி தமிழகத்துக்குச் சாதகமான எல்லாவற்றையும் வாங்கிவிடுகிறார். அப்படித்தான் மத்திய அரசிடம் ஒகேனக்கல் திட்டத்திலும் ஏமாற்றியிருக்கிறார். இந்தத் திட்டத்தினால் பெங்களூரு மக்களுக்கு தண்ணீர்ப் பிரச்னை வந்துவிடும். அதை கருணாநிதி மூடி மறைத்து விட்டார். கேபிள் ஆபரேட்டர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.??

ஒகேனக்கல் நீரை தமிழக அரசு குடிநீர்த் திட்டத்துக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே பெங்களூரு ஒப்பந்தத்தில் கர்நாடக அரசு கையப்பமிட்டிருக்கிறதே?

??அது பத்து வருடத்துக்கு முன்னால் போடப்பட்ட ஒப்பந்தம். பெங்களூரு குடிநீர்த் திட்டம் என்று ஒன்று வந்த போது, அப்போது தமிழக அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, மத்திய அரசு அதில் தலையிட்டு, ?காவிரிக்குக் குறுக்கே பெங்களூரு குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம். அதே வேளையில் ஒகேனக்கல்லில் இருந்து தமிழகம் குடிநீருக்காக ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியது. அதை நான் மறக்கவில்லை. அப்போது மத்திய அரசு முன்னின்று பஞ்சாயத்துச் செய்து வைத்தது. ஆனால், கருணாநிதி தன்னுடைய செல்வாக்கை வைத்துக்கொண்டு கர்நாடகத்திடம் மத்திய அரசு கருத்துக் கூட கேட்டுவிடாமல் தடுத்து, அவர் நாட்டு மக்களுக்கு மட்டும் நல்லது செய்கிறார். அது நியாயமா? அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்கிறேன். அதுதான் சரியானது!?? என்று அனல் பறக்க தனது பேட்டியை முடித்துக? கொண்டார் வாட்டாள்

நன்றி :குமுதம் ரிப்போட்டர்

431. அந்தோணி முத்துவின் வார்த்தைகள் - உள்ளத்திலிருந்து !

என் இனிய கர்ணர்களே,

உங்கள் அன்பினாலும் தயவினாலும் எனக்கு மடிக்கணினி கிடைத்திருக்கிறது.
மனமெல்லாம் சந்தோஷத்தினால் பூத்துக் குலுங்குகிறது.
என் பழைய மேசைக் கணினிக்கும் இதற்கும் மலையளவு வித்தியாசம்.
அது Celeron 800 mhz processor, 128 mb RAM. சமயங்களில் ஆமை கூடத் தோற்று விடும்.

இது Core-2 Duo 1.83 Ghz processor, 2 Mb RAM, DVD Writer, Webcam, மற்றும் நிறைய வசதிகளைக் கொண்டது. அது ஆமை வேகம் என்றால் இது புலிப்பாய்ச்சல்.

அந்த டிசம்பர் மாதக் குளிரில் நடுங்கியபடி, கடவுளுக்கு நான் எழுதிய அந்தக் கடிதத்திற்கு எனக்கு இவ்வளவு அழகான பதில் கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.

கடவுள் நேரிடையாக செயலாற்றுவதில்லை.

தாம் தேர்ந்தெடுத்த சில நல்ல மனிதர்களின் மூலமாகவே அவர் செயல்படுகிறார் என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது.

அவரது செயல்களைச் செய்பவர்கள் அவராகவே மாறிவிடுகிறார்கள்.

இதை வெறுமனே ஒரு எலக்ட்ரானிக் பொருளாக என்னால் பார்க்க முடியவில்லை.

என் துன்பத்தைத் தங்களின் துன்பமாக உணர்ந்து….
நான் நலமாய் இருக்க வேண்டும் என மனதார விரும்பி….
பிரார்த்தனையோடு தங்களின் வியர்வைத்துளியையும் சேர்த்து….
மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு….
உருவாக்கப்பட்ட உயிருள்ள ஒரு ஜீவனாக இந்த மடிக்கணினியைப் பார்க்கிறேன்.

இத்தனைக்கும் இதற்காக உதவியவர்கள் எவரும் ஏதோ மாபெரும் கோடீஸ்வரர்களோ
வசதிகளில் புரள்பவர்களோ அல்ல.

அத்தனை பேருமே என் போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

அதனால்தானோ என்னவோ என் வலியையும் வேதனையையும் அவர்களால் முழுமையாக உணர முடிந்திருக்கிறதென நம்புகிறேன்.

நான் இதைத் திறந்து வேலை செய்யும்போதெல்லாம்,
இதற்கு உதவின, உதவ நினைத்த் அத்தனை அன்பு ஆத்மாக்களும்…
மனதளவில் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்.

நான் தனியன் இல்லை எனக்காகவும் கவலைப்பட இத்தனை ஜீவன்கள் இருக்கிறார்கள் என்கிற உணர்வே ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொடுக்கிறது.

அனைவருக்கும் என்னுடைய கண்ணீர் கலந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

எல்லாம் வல்ல இறை சக்தி அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், விரும்பியதனைத்தையும் இடைவிடாது வழங்க மனமுருகிப் பிரார்த்திக்கிறேன்.

எவரஸ்ட்டின் உச்சிக்கு ஏறி இப்படி கத்த வேண்டும் போலத் தோன்றுகிறது.

நான் அதிர்ஷ்டக்காரன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Regards
Anthony Muthu.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails